×

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின் : ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கினை பதிவு செய்தார்!!

சென்னை: இந்தியாவின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று நேரில் சென்று வாக்களித்தார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து நாட்டின் 15வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று தொடங்கியது. இத்தேர்தலில் பாஜ கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.

எம்பி, எம்எல்ஏக்கள் வாக்குச்சீட்டு முறையில் புதிய ஜனாதிபதி தேர்வு செய்ய உள்ளனர். எம்எல்ஏக்கள் ஓட்டு போடுவதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைமை செயலகத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 234 எம்எல்ஏக்கள் வாக்களிக்கும் வகையில் சென்னை தலைமை செயலக வளாகத்தில் உள்ள குழு கூட்ட அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது முழுமையாக குணமடைந்துள்ளார். அவர் தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க மருத்துவமனையில் இருந்து நேரடியாக தலைமைச் செயலகத்திற்கு சென்றார். அங்கு உள்ள வாக்கு பெட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்திற்கு செல்கிறார். கொரோனாவிலிருந்து முற்றிலும் குணமாகி முதல்வர் ஸ்டாலின், ஒரு வாரம் ஓய்வு எடுக்க முதலமைச்சருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.  அதே நேரத்தில் அமைச்சர் ஆவடி நாசர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Chief Minister ,M.K.Stalin ,presidential , Hospital, Discharge, Principal, M.K.Stalin
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து