பன்ட் - ஹர்திக் அபார ஆட்டம் தொடரை வென்றது இந்தியா

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணியுடனான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. காயம் காரணமாக பும்ரா விலகியதை அடுத்து, சிராஜ் சேர்க்கப்பட்டார். ராய், பேர்ஸ்டோ இருவரும் இங்கிலாந்து இன்னிங்சை தொடங்கினர். பேர்ஸ்டோ, ஜோ ரூட் இருவரும் சிராஜ் வேகத்தில் டக் அவுட்டாகி வெளியேற, இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.ராய் 41 ரன் (31 பந்து, 7 பவுண்டரி), ஸ்டோக்ஸ் 27 ரன் எடுத்து ஹர்திக் வேகத்தில் பெவிலியன் திரும்பினர். கேப்டன் பட்லர் - மொயீன் அலி ஜோடி 5வது விக்கெட்டுக்கு 75 ரன் சேர்த்தது. மொயீன் 34 ரன் (44 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), லிவிங்ஸ்டன் 27 ரன் எடுத்து ஆட்டமிழக்க, பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த கேப்டன் பட்லர் 60 ரன் எடுத்து (80 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ஹர்திக் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் பிடிபட்டார்.

டேவிட் வில்லி (18 ரன்), கிரெய்க் ஓவர்ட்டன் (32 ரன்), ரீஸ் டாப்லி (0) ஆகியோர் சாஹல் சுழலில் விக்கெட்டை பறிகொடுக்க, இங்கிலாந்து 45.5 ஓவரில் 259 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கார்ஸ் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் ஹர்திக் 4, சாஹல் 3, சிராஜ் 2, ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்தியா 72 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், பன்ட் - ஹர்திக் ஜோடி அபாரமாக விளையாடி ரன் சேர்க்க, இந்தியா 42.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 261 ரன் எடுத்து வென்றது. பன்ட் 125 ரன் (113 பந்து, 16 பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்திக் 71 ரன் (55 பந்து, 10 பவுண்டரி) விளாசினர். ஆல் ரவுண்டராக அசத்திய ஹர்திக் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.

Related Stories: