சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன்: சிந்து சாம்பியன்

சிங்கப்பூர்,  ஜூலை 18: சிங்கப்பூர் ஓபன் ‘சூப்பர் 500’ பேட்மின்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை ஜி யி வாங்குடன் (22 வயது, 11வது ரேங்க்) நேற்று மோதிய சிந்து அதிரடியாக புள்ளிகளைக் குவித்து 21-9 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த ஜி யி வாங் 21-11 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. அதில் பதற்றமின்றி விளையாடி தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து 21-9, 11-21, 21-15 என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக சிங்கப்பூர் ஓபனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார்.

நடப்பு சீசனில் அவர் வென்ற 3வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஜனவரியில்  சையத் மோடி சர்வதேச ஓபன் போட்டியிலும், மார்ச்சில் நடந்த ஸ்விஸ் ஓபன் போட்டியிலும் அவர் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டிருந்தார். ஜி யி வாங்குக்கு எதிராக மோதிய 2 போட்டியிலும் சிந்துவே வெற்றி பெற்றுள்ளார். மார்ச் மாதம் நடந்த  ‘ஆல் இங்கிலாந்து ஓபன்  பேட்மின்டன்’ போட்டியின் முதல் சுற்றில் அவர் ஜி யி வாங்கை வீழ்த்தியிருந்தார்.

*பிரதமர் வாழ்த்து

சிங்கப்பூர் ஓபனில் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள சிந்துவுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிந்துள்ள தகவலில், ‘முதல் முறையாக சிங்கப்பூர் ஓபனில் பட்டம் வென்றுள்ள சிந்துவுக்கு எனது வாழ்த்துக்கள். அவர் தனது தனித்துவமான விளையாட்டுத் திறமையை மீண்டும் நிரூபித்து வெற்றியை வசப்படுத்தி உள்ளார். அவரது இந்த வெற்றி நாட்டுக்கு பெருமை சேர்ப்பதுடன், இளம் வீரர், வீராங்கனைகளுக்கு உத்வேகத்தை கொடுக்கும்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: