கஞ்சா விற்பனையில் கோஷ்டி மோதல்: 2 கல்லூரி மாணவர்கள் கைது

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே கடந்த சில நாட்களுக்கு முன் கஞ்சா விற்பனையில் யார் பெரியவர் என்ற தகராறில், பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலை பொறியியல் கல்லூரியை சேர்ந்த வடமாநில மாணவர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து மோதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 கல்லூரி மாணவர்களை கைது செய்தனர்.செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் அருகே பொத்தேரியில் பிரபல தனியார் பல்கலையின் பொறியியல் கல்லூரியில் பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான மாணவர்கள், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். மேலும், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதில், இக்கல்லூரியில் படிக்கும் வடமாநிலங்களை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து செயல்பட்டு வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் இந்த 2 கோஷ்டிகளுக்கு இடையே கஞ்சா விற்பனையில் யார் பெரியவர் என்ற வாய்த்தகராறில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் பொத்தேரி அருகே ஜிஎஸ்டி சாலையில் கத்தி, கற்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களால் சரமாரி தாக்கிக் கொண்டனர். இதில், ஏராளமான மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதன் வீடியோ காட்சிகள் பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். இதில், அடிதடி தகராறில் ஈடுபட்ட மாணவர்களின் வீடுகளை கண்டறிந்து, அங்கிருந்து கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் மற்றும் அதை உபயோகிக்கும் கருவிகளை பறிமுதல் செய்தனர். மேலும், இவ்வழக்கு தொடர்பாக நேற்றுமுன்தினம் இரவு வடமாநிலங்களை சேர்ந்த தேவஷிஸ் சமோலி (21), அபிஷேக் பிள்ளை (21) என 2 கல்லூரி மாணவர்களையும் கைது செய்தனர்.பின்னர், இருவரையும் செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதியிடம் ஆஜர்படுத்தினர். இதைத் தொடர்ந்து, 2 கல்லூரி மாணவர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்திருக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் கல்லூரி மாணவர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: