×

வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் சூரிய சக்தியில் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் மானியத்தில் அமைக்கும் புதிய திட்ட குறித்து காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு, வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் “வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம்” மானியத்தில் அமைக்கும் புதிய திட்டத்தை கடந்த 2021-22ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

விவசாயிகள் தங்கள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை தங்கள் விளைநிலங்களிலேயே பழுது நீக்கி பராமரிக்கவும், விவசாயிகள் வேளாண் பணிகளை எவ்வித இடர்பாடுகளின்றி குறித்த நேரத்தில் செய்திடவும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி நிலையான வருமானம் ஈட்டி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இம்மையங்கள் அமைக்கப்படுகின்றன. தொழில் முனைவோர், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இம்மையங்கள் மானியத்தில் அமைத்து தரப்படும். இம்மையங்கள்  ரூ 8 லட்சம் செலவில் அமைக்கப்படுகின்றன. இதில், 50 சதவீத மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ 4 லட்சம் மானியம் வழங்கப்படும்.

மையங்கள் அமைக்க போதிய இடவசதியும், மும்முனை மின்சார இணைப்பும் கொண்ட கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் அருகாமையில் உள்ள வேளாண் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தினை அளிக்கலாம். மாவட்ட ஆட்சியரின் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளிகளுக்கு இம்மையம் மானியத்தில் அமைத்து தரப்படும்.மையங்கள் அமைக்கத் தேவையான இயந்திரங்கள் ஒப்பந்த புள்ளி அடிப்படையில் கண்காணிப்பு பொறியாளரால் முடிவு செய்யப்பட்டு, பயனாளிகள் மொத்த தொகையினை செலுத்தி வாங்கிக் கொள்ளலாம்.

பின்னர், சம்மந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர் மையத்தினை நேரில் ஆய்வு செய்து, திருப்தி அளிக்கும் வகையில் இருப்பின் மானியத்தொகையினை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பின்னேற்பு மானியமாக செலுத்தப்படும்.  மேலும்,  விவரங்களுக்கு அருகாமையில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர் (வே.பொ) களை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள், உதவி செயற்பொறியாளர் (வே.பொ), வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையம், பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம்  631502 என்ற முகவரியிலும்,  044-24352356 என்ற தொலைபேசி, 90030 90406 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Agricultural Engineering Department , Solar Pump Sets Repair and Maintenance Center by Department of Agricultural Engineering: Collector Information
× RELATED 2024-2025ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்...