×

அறிவு சார்ந்த கல்வி பாடத்திட்டங்கள் தேவை: இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணுபிள்ளை

காஞ்சிபுரம்:  மாணவர்களுக்கு அறிவு சார்ந்த கல்வி பாடத்திட்டங்கள் தேவை என்று இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணுபிள்ளை கூறியுள்ளார். காஞ்சிபுரம் கா.மு. சுப்புராய முதலியார் மேல்நிலைப் பள்ளியில், தியாகம் போற்றுவோம் இயக்கத்தின் சார்பில் 75- வது சுதந்திர தினத்தினை கொண்டாட வரும் நிலையில், இஸ்ரோ விஞ்ஞானி பத்மபூஷன் டாக்டர் சிவதாணு பிள்ளை மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.முன்னதாக பள்ளியில் மாணவர்கள் அமைத்திருந்த அறிவியல் கண்டுபிடிப்பு கண்காட்சிகளை பார்வையிட்டு மாணவருடன் உரையாடினார்.

நேற்று முன்தினம் தனது 75 வது பிறந்தநாளை கொண்டாடிய சிவதாணு பிள்ளைக்கு மாணவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். விழாவில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் பலரின் கேள்விகளுக்கு அவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் விளக்கங்களை அளித்தார்.இதன்பின் செய்தியாளரிடம் பேசுகையில் , இந்தியாவைப் பொறுத்தவரையில் தனிநபர் வளர்ச்சி தவிர்த்து பொது வளர்ச்சி காணும் போது தான் இளைஞர்கள் மேம்படுவார்கள். புதிய காலகட்டத்தில் இளைஞர்கள் விஞ்ஞான அறிவு வளர்ச்சியில் திறன் பட செயலாற்றி வருகின்றனர்.

அவர்களின் நல்வழிப்படுத்தும் போக்கில் நாம் செல்ல வேண்டும் . ஆசிரியர்கள் பாடங்களை மட்டும் கற்றுத் தராமல் கூடுதல் அறிவு வளர்ச்சியை அவர்களுக்கு தர வேண்டும். அறிவு சார்ந்த கல்வி திட்டத்தில் நல்ல நிலையில் நாம் உள்ளோம்.  மாணவ, மாணவியின் கற்பனைத் திறன் விடாமுயற்சி உள்ளிட்டவைகளை நாம் ஊக்குவித்தால் நாடு மிகப்பெரிய வளர்ச்சி பெறும். இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஆதித்யா என்னும் செயற்கைக்கோள் விட திட்டமிட்டுள்ளதாகவும், சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள நிலைப்புள்ளியில் இந்த செயற்கைக்கோள் நிறுத்தப்படும் . இவ்வாறு அவர் கூறினார்.  இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : ISRO ,Sivathanupillai , Need for knowledge-based education curricula: ISRO scientist Sivathanupillai
× RELATED விண்ணுக்கு சென்று பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி: இஸ்ரோ தகவல்