திருவள்ளூர் நகராட்சியில் சுகாதாரமற்ற முறையில் ஆட்டிறைச்சி விற்பனை: நோய் பரவும் அபாயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி பகுதியில் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் ஆட்டிறைச்சியால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அசைவ உணவை 100க்கு 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் உண்கின்றனர். இதனால்  கோழி, ஆடு, மாடு, பன்றி, வாத்து  என அனைத்து வகையான இறைச்சிகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு இறைச்சிக்கும் ஒரு சிலர் அடிமையாக இருப்பர். வீட்டில் மட்டுமல்லாது, உணவகங்களுக்கு சென்றும் அசைவ உணவு வகைகளையே அதிகளவில் உண்கின்றனர். கடந்த காலங்களில் தெருக்களில் ஆடுகளை அறுத்து விற்பனை செய்து வந்ததால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் இருந்தது. அதனால் அரசின் உத்தரவின்பேரில் நகராட்சி பகுதிகளில் ஆடு தொட்டி ஏற்படுத்தி, அங்கு பொது மக்களுக்கு விற்பனை செய்யும் ஆடுகளை கொண்டுவந்து,  அதை அங்குள்ள கால்நடை மருத்துவர் ஆய்வு செய்து, இது நோய்வாய் இல்லாத, தரமான ஆடு என அங்கீகரித்த சீல் போட்ட பிறகே விற்பனைக்கு எடுத்துச் செல்வதுண்டு.

இந்நிலையில், திருவள்ளூர் நகராட்சியில் எடப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த ஆட்டுதொட்டி இப்போது செயல்படுவதில்லை என தெரிகிறது. இதனால் ஆட்டிறைச்சி விற்பனை செய்யும் வியாபாரிகள் தங்கள் இஷ்டத்திற்கு வீட்டிலேயே அறுத்து அதனை கடைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். அந்த ஆடு நோய்வாய்பட்டதா, அல்லது விபத்தில் காயமடைந்து அதனால் சுகாதார சீர்கேடு அடைந்ததா என்பதையெல்லாம் ஆய்வு செய்யாமல் திருவள்ளூர் நகரின் பெரும்பாலான இடங்களில் ஆட்டிறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு விற்பனை செய்யும் ஆட்டிறைச்சியை சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு,  கிட்னி செயலற்று போவது, உடல்நலக்குறைவு, தோல் வியாதி போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

மேலும் நோய்வாய்பட்ட ஆடுகளில் மட்டுமே ஈக்கள் அதிகம் மொய்க்கும் என்று சொல்வதுண்டு. அதேபோல் திருவள்ளூர் நகரின் மையப் பகுதியில் உள்ள  கடையில் தொங்கவிட்டுள்ள ஆட்டிறைச்சியை ஈக்கள் மொய்ப்பதை பார்க்கும் போதே நமக்கு குமட்டல் தான் ஏற்படுகிறது. கடந்த காலங்களில் அனைத்து வியாபாரிகளும் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட ஆட்டுத் தொட்டிக்கு வந்து ஆடுகளை சோதனை செய்வதால் அதன் மூலம் நகராட்சிக்கும் வருவாய் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது ஆட்டு தொட்டியும் செயல்படாமல் போனதால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் நோய்வாய்பட்ட ஆடுகளை பொதுமக்கள் உண்ணும்போது பல்வேறு நோய்களுக்கும் ஆளாக நேரிடுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக ஆட்டிறைச்சி கடைகளை ஆய்வு செய்து நல்ல தரமான ஆட்டிறைச்சியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: