×

மாணவி ஸ்ரீமதி மரண விவகாரம் அமைதி போராட்டத்தில் விஷமிகளை அனுப்பியது யார் என போலீஸ் விசாரிக்கிறது: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி

சென்னை: மாணவி ஸ்ரீமதிமரண விவகாரத்தில், அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் விஷமிகளை அனுப்பியது யார் என்பதையும் சேர்த்து போலீஸ் விசாரிக்கிறது என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி கொடுத்துள்ளார். மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு மூன்று நாட்களாக போராடியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பேட்டிக்கு பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

 ஸ்ரீமதி மரணத்தைப் பொறுத்தமட்டில் அச்செய்தி வெளிவந்தவுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி தலைவரும், காவல்துறைக் கண்காணிப்பாளரும் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள்.  மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி, போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டிருந்தது. மாணவி மரணம் குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த வேளையில் பெற்றோர் தரப்பில் சிபிசிஐடி விசாரணை கோரி வழக்கு தொடர்ந்து - அந்த வழக்கு விசாரணை நாளைய (இன்று) தினம் நடைபெறவிருக்கிறது. இதற்கிடையில் பிள்ளையை இழந்த பெற்றோரின் குடும்பத்தைத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லி, மாணவியின் மரணம் குறித்த விசாரணை பாரபட்சமின்றி நடக்கும் என்று உறுதியும் அளித்துள்ளதை ஏனோ தன் கட்சியில் இருக்கும் குழப்பத்தில் மறந்து விட்டு, எந்தப் பதவியில் நாம் இருக்கிறோம் என்பது தெரியாத குழப்பத்தில் இருக்கும் பழனிசாமி திமுக அரசின் மீது வசைபாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

இதற்கிடையில் இன்றைய தினம் அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில், வன்முறையை ஏற்படுத்த வேண்டும் என்று எங்கிருந்தோ தூண்டிவிடப்பட்டு வந்த சில விஷமிகள் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ளார்கள். இதை அறிந்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் அமைதி காக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு, தமிழ்நாடு காவல்துறைத் தலைமை இயக்குநரையும், உள்துறைச் செயலாளரையும் கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி - வன்முறையை உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வந்து தற்போது அங்கே அமைதியை நிலை நாட்டியிருக்கிறார்.எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது காவல்துறை நிர்வாகம் எப்படியிருந்தது என்றால் ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேரை காக்கை குருவிகள் போல் சுட்டுக் கொன்று, பல நாட்கள் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க முடியாமல் அரசே தோல்வியடைந்து ஸ்தம்பித்து நின்றது.

சாத்தான்குளம் காவல் நிலைய கஸ்டடி மரணத்தில் காவல்நிலையத்தின் கட்டுப்பாட்டையே வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல உயர்நீதிமன்றமே உத்தரவிட்ட சூழல் உருவாகி  தன் கீழ் இருந்த காவல்நிலையத்தின் நிர்வாகத்தையே கோட்டை விட்டு கோட்டையில் அமர்ந்திருந்தார் பழனிசாமி. அதிமுக ஆட்சியில் குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் நான்காண்டு நிர்வாகத்தில் டபுள் டிஜிபி போட்டு காவல்துறையையே சீரழித்த பழனிசாமிக்கு - இன்று திமுக ஆட்சியில் தலைநிமிர்ந்து நின்று சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டு மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரையும்,  முதலமைச்சரையும் சொல்ல எந்த தார்மீகத் தகுதியும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணை முடிவில் தவறு யார் மீது இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். குறிப்பாக எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் விஷமிகளை அனுப்பி இந்த வன்முறையைத் தூண்டிவிட்டவர்கள் யார் என்பதையும் சேர்த்தே போலீஸ் விசாரித்து வருகிறது. ஆகவே கலவரத்தில் ஈடுபட்டவர்கள்,  தூண்டி விட்டவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தக்க தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என்பதோடு மாணவி ஸ்ரீமதி மரணத்தில் நடைபெறும் சி.பி.சி.ஐ.டி விசாரணையின் அடிப்படையில் நிச்சயமாக  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags : Smt. ,Minister ,AV ,Velu ,Edappadi Palaniswami , The police is investigating who sent the poisoners in the peaceful protest over the death of student Smt.: Minister AV Velu responds to Edappadi Palaniswami.
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...