சிங்காநல்லூர்-வெள்ளலூர் இடையே வெள்ளப்பெருக்கால் நொய்யல் தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டது: போக்குவரத்து பாதிப்பு-வாகன ஓட்டிகள் அவதி

பீளமேடு: கோவை சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் சாலையில் உள்ள நொய்யல் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. கோவை சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூருக்கு செல்லும் சாலையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் மிகவும் பழுதடைந்ததால் அதை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. புதிய பாலம் கட்டும் வரை அந்த  இடத்திற்கு அருகில் தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. அதன் வழியாக கடந்த சில மாதங்களாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வந்தன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நொய்யல் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த தண்ணீர் சிங்காநல்லூர்- வெள்ளலூர் சாலையில் உள்ள  தரைப்பாலத்தை அடித்துச் சென்றுவிட்டது. நேற்று வெள்ளம் குறையத் தொடங்கியதால் தரைப்பாலம் அடித்துச்  செல்லப்பட்டது வெளியே தெரிந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள்  சிரமப்பட்டனர். அமைச்சர் செந்தில்பாலாஜி சேதமடைந்த தரைப்பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று கூறினார்.

* கல்லட்டி ஆற்று வெள்ளத்தில் பெண் இன்ஜினியர் பலி

ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் கட்டா வினிதா சவுத்ரி (26). இவர் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 11 மாதங்கள் ஆகிறது. கணவர் உள்பட 9 பேருடன் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். நேற்று முன்தினம் மாலை ஊட்டியில் உள்ள கல்லட்டியில் தங்கும் விடுதிக்கு சென்றனர். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு, அதே பகுதியில் உள்ள 20வது கொண்டை ஊசி வளைவுப்பகுதியில் உள்ள கல்லட்டி ஆற்றங்கரையோரம் அமர்ந்து ஜாலியாக பேசினர். அப்போது ஆற்றில் நீர் வரத்து குறைந்திருந்தது. இதனால் அனைவரும் ஆற்றில் இறங்கி விதவிதமாக போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். திடீரென ஆற்றில் வெள்ளம் அதிகரித்து கட்டா வினிதா சவுத்ரி இழுத்து செல்லப்பட்டு பலியானார். மற்றவர்கள் வேகமாக கரையேறி உயிர் தப்பினர். மாநில பேரிடர் மீட்பு குழுவினர், சுமார் 2 கி.மீ. தொலைவில் மரத்தில் சிக்கியிருந்த பெண் இன்ஜினியரின் உடலை நேற்று காலை மீட்டனர். இதையடுத்து அந்த தங்கும் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது.

Related Stories: