பழுதான படகில் ஜீவமரணப் போராட்டம் இலங்கை மீனவர்களை கரைசேர்த்து உயிர்காத்த ராமேஸ்வரம் மீனவர்கள்: உணவு, குடிநீர் கொடுத்து உதவிக்கரம்

ராமேஸ்வரம்: படகு பழுதானதால் உயிருக்கு போராடிய 2 இலங்கை மீனவர்களை ராமேஸ்வரம் மீனவர்கள் மீட்டு பாதுகாப்பாக கச்சத்தீவில் இறக்கி விட்டனர். ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். இதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த ஒரு படகில் இருந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, சிறிது தூரத்தில் இலங்கை படகு ஒன்று கடலில் நிலைதடுமாறிக் கொண்டிருந்ததைக் கவனித்தனர். அந்த படகில் இருந்தவர்கள் கைகளை தூக்கி உதவி கேட்டுள்ளனர். இதனை பார்த்த ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை படகின் அருகில் சென்று பார்த்தபோது, படகு பழுதாகி மூழ்கும் நிலையில் இருந்தது தெரிந்தது. அதிலிருந்த 3 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இரண்டு பேரை மீட்டு தங்களது படகில் ஏற்றிக் கொண்டனர். மூன்றாவது நபர் இறந்துவிட்டதால் படகிலேயே விட்டு விட்டனர். இரண்டு இலங்கை மீனவர்களுக்கும் தண்ணீர், உணவு கொடுத்து உதவினர். மீட்கப்பட்ட மீனவர்களிடம் கேட்டபோது, இலங்கை தலைமன்னார் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ், ஜனார்த்தனன் என்று தெரிவித்தனர். இருவரையும் கச்சத்தீவு கடலோர பகுதியில் நேற்று அதிகாலை இறக்கி விட்டனர். கரை திரும்பிய மீனவர்கள் கூறும்போது, ‘‘மீட்கப்பட்ட இலங்கை மீனவர்களை விடுவதற்காக தலைமன்னாருக்கு சென்றால் இலங்கை கடற்படையினர் எங்களை கைது செய்வார்கள். ராமேஸ்வரத்திற்கு அழைத்து வந்தால் இந்திய கடற்படையினர் இலங்கை மீனவர்கள் இருவரையும் கைது செய்வார்கள். ஆகையால் கச்சத்தீவு கடலோர பகுதியில் இறக்கிவிட்டோம். அவர்கள் தீவின் கடற்கரைக்கு சென்றடைந்து எங்களுக்கு கையசைத்து உறுதி செய்தபின் திரும்பினோம்’’ என்றனர். படகிலேயே இறந்த மட்டக்களப்பு மீனவர் ராயமூர்த்தி (52) உடல் மன்னார் பகுதி மீனவர்களால் மீட்கப்பட்டது.

Related Stories: