×

கண்டலேறுவில் திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்துக்கு வந்தது

சென்னை: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் கண்ணன்கோட்டை நீர்தேக்கத்துக்கு முதல் முறையாக சென்றது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா - தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஆந்திர அரசு தமிழகத்துக்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சியும், 3 டி.எம்.சி சேதாரம் என மொத்தம் 15 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். அதன்படி, கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு கடந்த மே மாதம் 5 தேதி காலை 9 மணியளவில் வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட்டனர்.

பின்னர் படிப்படியாக உயர்த்தி 1,500 கன அடியாகவும், பின்னர் 2 ஆயிரம் கன அடியாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர், இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டை 8ம் தேதி வந்தடைந்தது. பின்னர் 9 தேதி பூண்டி நீர்த்தேக்கத்துக்கு சென்றடைந்தது. மேலும், தற்போது கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 1,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் 1,000 கன அடி ஆந்திர விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்திற்கு எடுத்துக்கொண்டது போக மீதமுள்ள 300 கன அடி தண்ணீர் மட்டுமே தமிழகத்திற்கு வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் தற்போது பூண்டி நீர்த்தேக்கத்திற்கு செல்லும் தண்ணீர் திடீரென நிறுத்தட்டது. இந்நிலையில் தற்போது ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டில் இருந்து முதன் முறையாக கண்ணன் கோட்டை - தேர்வாய் கண்டிகையில் உள்ள  புதிய நீர்த்தேக்கத்துக்கு நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் வினாடிக்கு 285 கன அடிவீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 500 மில்லியன் கன அடி தற்போது 447 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kandaleru ,Kannankot reservoir , The Krishna water opened at Kandaleru reached the Kannankot reservoir
× RELATED வரத்து குறைந்ததையடுத்து பூண்டி நீர்...