சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி ஆலோசனை: பாஜ எம்எல்ஏக்களும் பங்கேற்றதால் பரபரப்பு

சென்னை: சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி  நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பாஜ எம்எல்ஏக்களும் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தேர்தலில் பாஜ கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவருக்கு அதிமுகவில் எடப்பாடி அணியினர், ஓபிஎஸ் அணியினரும் தனித்தனியாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெற உள்ளது.

இந்த சூழலில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் 17ம் தேதி நடைபெறும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி நேற்று மாலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 62 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இன்று நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏக்களுக்கு விளக்கமளித்தார். மேலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி எம்எல்ஏக்கள் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பாஜவை சேர்ந்த எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், ஆர்.காந்தி, புரட்சி பாரதம் எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பாஜ எம்எல்ஏக்கள் கலந்து கொண்டது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ஜனாதிபதி , துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக ஆலோசிப்பது தான் வழக்கம்.

ஆனால், இந்த கூட்டத்தில் பாஜவினர் கலந்து கொண்டது ஏன்? என்ற கேள்வி அதிமுக தொண்டர்களிடையே எழுந்துள்ளது. அதே நேரத்தில் திரவுபதி முர்முவின் தேர்தல்  முகவர்கள் என்ற முறையில் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், காந்தி ஆகியோர் கலந்து கொண்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கமாக அதிமுக தலைமை அலுவலகத்தில் தான் எம்எல்ஏக்கள் கூட்டம் நடப்பது வழக்கம். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்துவதாக எடப்பாடி பழனிசாமி முதலில் திட்டமிட்டிருந்தார். அவர் தங்கியிருப்பது அரசு இல்லம். இதனால், இந்த கூட்டத்தை அங்கு நடத்த கூடாது என்று ஓபிஎஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு ெதரிவிக்கப்பட்டது. அதாவது கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளை அரசு இல்லத்தில் நடத்த அனுமதிக்க கூடாது என்று போர்க்கொடி தூக்கினர்.

இதைத் தொடர்ந்தே தனியார் ஓட்டலில் கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவில் மொத்தம் 65 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 62 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், 3 எம்.எல்.ஏ.க்கள் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக ஆலோசிப்பது தான் வழக்கம். ஆனால், இந்த கூட்டத்தில் பாஜவினர் கலந்து கொண்டது ஏன்? என்ற கேள்வி அதிமுக தொண்டர்களிடையே எழுந்துள்ளது.

Related Stories: