×

சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தனியார் பள்ளியில் நடந்த மாணவி சாவு குறித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். சின்னசேலம் அருகே பள்ளி மாணவி உயிரிழந்தது, அங்கு நடந்த கலவரம் தொடர்பாக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். பின்னர் டிஜிபி சைலேந்திரபாபு கள்ளக்குறிச்சியில் அளித்த பேட்டி: மாணவி இறப்பு தொடர்பாக உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்கள். சிசிடிவி கேமராவின் அடிப்படையில் புலன் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டங்களில் காவல்துறையின் சார்பில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு அவர்களுடைய சந்தேகங்கள் தீர்க்கப்பட்டுள்ளன. குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க குறிப்பிட்ட மருத்துவர்கள் மூலம் போஸ்ட் மார்டம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சின்னசேலத்தில் ஒரு டிஐஜி, 2 எஸ்பிகள் தலைமையில் 350க்கு மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அதையும் மீறி கலவரம் செய்துள்ளார்கள். கலவரத்தில் ஈடுபட்ட 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கலவரம் அடக்கப்பட்டுள்ளது. காவல்துறையைச் சேர்ந்த ஒரு டிஐஜி, எஸ்.பி, 52 காவலர்கள் காயமடைந்துள்ளனர். ஒரு டி.ஐ.ஜி தாக்கப்பட்டதற்கு பின்பும் காவலர்கள் தங்களது பலத்தை பயன்படுத்தவில்லை. ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்து காவல்துறையினர் தங்கள் கடமையை மிகவும் கவனமாக செய்து இருக்கிறார்கள்.

இந்த வழக்கை பொருத்தமட்டில் தீவிரமான விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவியின் மரணத்திற்கு காரணமான போதுமான பாதுகாப்பு அந்த விடுதியில்  இல்லாத சூழலிலும் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு மேல்விசாரணைக்கு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்கு இருக்கக்கூடிய எல்லா சந்தேகங்களையும் குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை விசாரித்து அதற்கான உரிய பதிலை தருவார்கள். மாணவி மர்ம மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து உரிய புலன் விசாரணையின் போது தான் தெரிய வரும். இந்த பள்ளிக்கூடம் தாக்கப்பட்டது தனி வழக்கு.

அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், ஏன் இந்த பள்ளிக்கூடத்தை தாக்க வேண்டும் என்பது குறித்து எல்லாம் தனி புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உள்துறை முன்கூட்டியே கணித்ததன் விளைவாகத்தான் கடந்த நான்கு நாட்களாக ஒரு டி.ஐஜி தலைமையில் கூடுதல் அளவில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் இங்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது போன்ற கல் வீச்சு சம்பவங்களில் காயங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று. இது போன்ற கலவரங்களில் காவல்துறையினர் தங்களது சட்டத்துக்கு  உட்பட்டுதான் செயல்பட முடியும்.

கல்வீச்சு சம்பவத்தில் காவலர்கள் பாதிக்கப்பட்டாலும் இந்த சம்பவத்தை அவர்கள் எப்படி கையாண்டுள்ளார்கள் என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும். டிஐஜி பாண்டியன், எஸ்பி செல்வகுமார் எந்த அளவுக்கு திறம்பட ஒரு அசம்பாவிதம் நிகழாமல் எதிர்வினை இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள், சட்டம் ஒழுங்கு எவ்வாறு பாதுகாக்கப்பட்டது என்பதைத்தான் நாம் இங்கு பார்க்க வேண்டும். உயிர் சேதங்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இவ்வளவு கூட்டம் எப்படி வந்தது என்பது குறித்து உரிய புலன் விசாரணையின் போது தான் தெரிய வரும். வாட்ஸ் அப் குரூப் நடத்தியவர்கள் யார் என்று கண்டிப்பாக புலன் விசாரணையில் விசாரிக்கப்படும். ‌இந்த கலவரத்தில் மூலமாக ஈடுபட்டவர்கள் குறித்த வீடியோ ஆதாரம் உள்ளது.  கைது செய்ய சிசிடிவி கேமரா உள்ளிட்ட பல ஆதாரங்கள் இருப்பதால் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள். போதுமான ஆதாரங்கள் கைவசம் உள்ளன. இந்தப் போராட்டத்தில் கைதானவர்கள் யார், அவருடைய பின்புலம் என்ன என்பது குறித்த விவரங்கள் பத்திரிகைகளுக்கு தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* வதந்திகளை நம்ப வேண்டாம்: உள்துறை செயலாளர் பேட்டி
கள்ளக்குறிச்சியில் தமிழக உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி கூறுகையில், பள்ளியில் உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிகழ்வில் அனைத்து சந்தேகங்களும் களையப்படும். சரியான முறையில் அனைத்து  கோணங்களிலும் விசாரணை செய்யப்படும். அதே நேரத்தில் பொதுமக்கள் எந்தவிமான வன்முறையிலும் ஈடுபடவேண்டாமென்று கேட்டுக்கொள்கிறோம். வதந்திகளை நம்பவேண்டாம். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க வேண்டாம். ஒரு தனிப்பட்ட பள்ளிக்கு நடந்த அசம்பாவிதம் தனிப்பட்ட பார்வையில்தான் பார்க்க வேண்டும். பொதுவாக அனைத்து பள்ளிகளுக்கும் பாதுகாப்பு இருக்கிறது என்பது உறுதி செய்யப்படும். இதற்காக கவலைப்பட தேவையில்லை, என்றார்.

Tags : CPCID ,DGB ,Silendrababu , Transfer of case to CBCID: DGP Sailendrababu announced
× RELATED தவறு செய்யும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு