×

திருவொற்றியூரில் நவீன கருவி மூலம் வாயு கசிவு சோதனை

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் ஏற்படும் நச்சு வாயு கசிவை நேற்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நவீன கருவிகள் மூலம் சோதனை நடத்தினர். சென்னை திருவொற்றியூர், மணலி, எண்ணூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இயங்கி வரும் தனியார் மற்றும் அரசு ரசாயன உரங்கள், பெட்ரோலிய தொழிற்சாலைகளின் புகைபோக்கிகள் நச்சு வாயு கசிவு வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், உடல் அரிப்பு, மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன என பல்வேறு புகார்கள் எழுந்தன.

இப்புகார்களின் பேரில், மணலி சிபிசிஎல் நிறுவனம் உள்பட பல்வேறு தனியார் தொழிற்சாலைகளில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். எனினும், நச்சு வாயு கசிவு தொடர்ந்து கொண்டே இருந்தது. இதைத் தொடர்ந்து திருவொற்றியூரில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முகாமிட்டு, கடந்த சில நாட்களாக 5 இடங்களில் தெர்மோ பாசினல் சாம்பிலர் எனும் நவீன கருவி மூலம் காற்றில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட, அதிக மாசு கலப்பு உள்ளதா என சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முதல் திருவொற்றியூரில் 4 இடங்கள், காலடிப்பேட்டை, பெரியார் நகர் பகுதிகளில் உயரமான கட்டிடங்களில் நவீன கருவிகளை பொருத்தி, அப்பகுதிகளில் வெளியேறும் நச்சு வாயு கசிவின் அளவு குறித்து சோதனை நடத்தி வருகின்றனர். இதன்மூலம் காற்றில் மாசு கலப்பு அதிகரித்துள்ளதா என்பதை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட நிறுவங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, நச்சு வாயுவை வெளியேற்றும் நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags : Tiruvottiyur , Gas leakage testing with modern equipment at Thiruvottiyur
× RELATED முதல்வர் குடும்பம் குறித்து அவதூறு...