பார்ம் இழந்த விராட் கோஹ்லிக்கு ஓய்வு தேவையா? ஆர்.பி.சிங் சாடல்

மும்பை: கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணியில், விராட் கோஹ்லி இடம்பெறவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக சரியான பார்ம் இல்லாமல் தவித்து வரும் விராட் கோஹ்லிக்கு, அடிக்கடி ஓய்வு அளிப்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்துள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் மாஜி வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் கூறியிருப்பதாவது:-

பார்ம் இல்லாமல் இருக்கும்போது ஒரு வீரர் அதிகமான போட்டிகளில் விளையாடவே விரும்புவார். அப்போது தான் ஃபார்முக்கு திரும்ப முடியும் என்பது அவருக்கு தெரியும். இந்த ஓய்வு விராட் கோஹ்லிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சொகுசு வாய்ப்பாகதான் இருக்கும்.

நான் மற்றும் பிரக்யான் ஓஜா ஆகியோர் இந்திய அணிக்காக விளையாடும்போதெல்லாம், எங்களுக்கு ஓய்வு என்பதே கொடுக்கவில்லை. நன்றாக விளையாடுகிறோமா, இல்லையா? என்பது மட்டுமே பார்க்கப்பட்டது. அப்போது அணியில் இருந்த சீனியர் வீரர்கள் கூட ஓய்வு கேட்டதாக தெரியவில்லை. ஆனால், இப்போது பிசிசிஐ கடைபிடிப்பது புதிய நடைமுறையாக இருக்கிறது. விராட் கோஹ்லிக்கு உண்மையாகவே காயம் இருந்தால் அவர் ஓய்வு எடுப்பதில் தவறில்லை. ஆனால், ஃபார்ம் இல்லை என்பதற்காக ஓய்வு கொடுக்கிறோம் என்பதெல்லாம் என்ன வகையில் நியாயம். 2 ஆண்டுகள் ஒழுங்காக விளையாடாத ஒருவருக்கு அணியில் எந்த அடிப்படையில் மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கிறார்கள்? என்று தெரியவில்லை. இவ்வாறு ஆர்.பி.சிங் அதிரடியாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Related Stories: