கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம்; வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள்: போலீசார் மீது கற்கள் வீச்சு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் உடலில் காயங்கள் இருந்தது பிரேதப பரிசோதனையில் தெரியவந்துள்ளது. காயத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவர் இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருப்பதால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. மேலும் போராட்டக்காரர்கள் கற்களை வீசியதில் போலீசார் சிலர் காயமடைந்துள்ளனர்.

சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி பயின்று வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி விடுதியின் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு உறவினர்கள் கடந்த சில தினங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. மாணவியின் உடலில் காயங்களும் அடையில் ரத்த கறைகளும் இருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவர் இறந்திருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை கேள்விப்பட்ட மாணவியின் உறவினர்கள் இதற்கு காரணமான அந்த பள்ளியை இழுத்து மூடி பள்ளியின் தாளாளரை கைது செய்ய வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி-சின்னசேலம் அருகே மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டுவந்தனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்கள், கண்ணாடி பாட்டிகள் உள்ளிட்ட பொருட்களை வீசி தாக்குதல் நடத்தினர், இதில் போலீசார் சிலர் காயமடைந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் போலீசாரின் வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டதால் போராட்டம் கலவரமாக மாறியுள்ளது.

பள்ளி வளாகத்தில் இருந்த பொருட்கள் மற்றும் பேருந்துகளை போராட்டக்காரர்கள் சூறையாடினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைக்க வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். மேலும் காயமடைந்த போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார். மேலும் கலவரத்தி ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Related Stories: