கார்த்தி சிதம்பரம் எம்பி மருத்துவமனையில் அனுமதி

சென்னை: கார்த்தி சிதம்பரம் எம்பி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரத்துக்கு நேற்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.  காய்ச்சல் அதிகம் இருந்ததால் நேற்றிரவு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், பல்வேறு உடற் பரிசோதனைகளை செய்தனர். கொரோனா தொற்று காரணமாக அரசியல் தலைவர்கள், அடுத்தடுத்து தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வரும் நிலையில், கார்த்தி சிதம்பரம் உடல்நிலை அவரது ஆதரவாளர்கள் மத்தியில் திடீர்  கவலையை ஏற்படுத்தியது. இதனிடையே, கார்த்தி சிதம்பரத்துக்கு சாதாரண காய்ச்சல் தான் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

எனினும், கூடுதலாக சில பரிசோதனைகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன. இந்த பரிசோதனைகளை முடித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் கார்த்தி சிதம்பரம், வரும் 18ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்ட தொடரில் பங்கேற்பதற்காக டெல்லி புறப்பட்டு செல்வார் என்றும் காங்கிரசார் தெரிவித்துள்ளனர்.சமீபத்தில் இவரது இல்லத்தில் அமலாக்கத் துறையினர் அடுத்தடுத்து சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும், விசா மோசடி வழக்கு தீவிரமாக நடந்து வரும் சூழலில் அவர் மனு மீதான தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: