×

கோயில் அதிகாரி உத்தரவை மீறி யூடியூபர் கார்த்தி கோபிநாத் ரூ.33 லட்சம் நன்கொடை வசூல்: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை பதில் மனு

சென்னை: கோயில் அதிகாரி உத்தரவை மீறி கார்த்தி கோபிநாத் பணம் வசூலித்து முறைகேடு செய்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்து, அதை கோயில் பணிகளுக்கு பயன்படுத்தாமல் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தி மோசடி செய்ததாக பாஜ ஆதரவாளரும், யூ டியூபருமான கார்த்திக் கோபிநாத்துக்கு எதிராக கோயில் செயல் அலுவலர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஆவடி குற்றப்பிரிவால் கடந்த மே 29ம் தேதி கைது செய்யப்பட்ட கார்த்திக் கோபிநாத் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், கோயில் திருப்பணி என்ற பெயரில் மிலாப் செயலி மூலம் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை 33 லட்சத்து 28 ஆயிரத்து 924 ரூபாய் கார்த்தி கோபிநாத் வசூலித்து உள்ளார். அதிலிருந்து சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை வேறு கணக்கிற்கு மாற்றியுள்ளார்.

கோயில் திருப்பணிக்களுக்காக தனி நபர் நன்கொடை வசூலிக்கக் கூடாது எனவும், அவ்வாறு வசூலித்து இருந்தால் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் கோயில் செயல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதையும் மீறி கார்த்திக் கோபிநாத் பணம் வசூலித்து உள்ளார். வெளிநாடுகளில் இருந்தும் பணம் வசூலித்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் மீறப்பட்டுள்ளது. இது குறித்தும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. வழக்கின் விசாரணை ஆரம்பகட்ட நிலையிலேயே உள்ளதால் கார்த்தி கோபிநாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது.இதையடுத்து வழக்கை இறுதி விசாரணைக்காக வரும் 21ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Tags : Karti Gopinath , YouTuber Karti Gopinath collects Rs 33 lakh donation in violation of temple authority order: Police reply to High Court
× RELATED கோயிலை புனரமைக்க பணம் வசூல் யூடியூபர்...