சென்னை நட்சத்திர ஓட்டலில் அதிமுக எடப்பாடி அணி எம்எல்ஏக்கள் கூட்டம்: இன்று காலை நடக்கிறது

சென்னை- சென்னை நட்சத்திர ஓட்டலில் அதிமுக எடப்பாடி அணி எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது. அதிமுக இரண்டாக உடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஒரு அணியும் உருவாகியுள்ளது. அதில் எடப்பாடி பழனிசாமி அணியில் 62 எம்எல்ஏக்களும், ஓ.பன்னீர்செல்வம் அணியில் 3 எம்எல்ஏக்களும் உள்ளனர். அதில் பன்னீர்செல்வம் அணியில் உள்ள 3 எம்எல்ஏக்களும் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், அவர்களை சுயேச்சை எம்எல்ஏக்களாக கருத வேண்டும் என்று எடப்பாடி அணியில் இருந்து இதுவரை சபாநாயகரிடம் மனு கொடுக்கவில்லை.

இதனால் பன்னீர்செல்வம் அணியும் அதிமுக உறுப்பினர்களாகவே சட்டப்பேரவையில் கருதப்படுகின்றனர். அதே நேரத்தில், ஜனாதிபதி தேர்தல் 18ம் தேதி நடைபெறுவதால், எப்படி வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. அதேநேரத்தில், பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர் வாக்கு அளிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் அவர் முழு குணமாகிவிட்டால், கண்டிப்பாக ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

* அதிமுகவில் இருந்து மேலும் 2 நிர்வாகிகள் நீக்கம்

அதிமுகவில் இருந்து மேலும் 2 நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி நீக்கி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுகவின் கொள்கைகளுக்கும், குறிக்கோள்களுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் அமலன் பி.சாம்ராஜ் (எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர்), டாக்டர் ஆதிரா நேவிஸ் பிரபாகர் (மருத்துவ அணி இணை செயலாளர்) ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: