நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் கத்தி குத்துப்பட்ட இளைஞருக்கு கத்தியை உள்ளே வைத்து தையல்

நாட்றம்பள்ளி: கத்திக்குத்து காயத்துடன் அரசு மருத்துவமனைக்கு உயிருக்கு போராடிய நிலையில் வந்தவருக்கு வயிற்றில் தங்கிய கத்தி துண்டை அகற்றாமல் தையல் போட்டு அனுப்பி வைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியம் மல்லகுண்டா ஊராட்சிக்குட்பட்ட குருபவானிகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார்(22). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தமிழரசனுக்கும் முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 15ம் தேதி மீண்டும் தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த தமிழரசன் கத்தியால் அருண்குமாரை சரமாரி குத்தியுள்ளார்.

இதில் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட அருண்குமாருக்கு, கத்தியால் வெட்டிய இடத்தில் தையல் போட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து அனுப்பினர். வீட்டுக்கு திரும்பிய அருண்குமார் நள்ளிரவில் தையல் போடப்பட்ட இடத்தில் பயங்கர வலியுடன் துடித்துள்ளார். இதனால் அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்ததில், கத்தியின் முனை உடைந்து வயிற்றுப்பகுதியிலேயே இருந்ததும், அதனை அகற்றாமலே நாட்றம்பள்ளி அரசு டாக்டர்கள் தையல் போட்டு அனுப்பியதும் தெரிய வந்தது. உடனடியாக அருண்குமாருக்கு அறுவை சிகிச்சை செய்து கத்தியின் முனைப்பகுதியை அகற்றி, சிகிச்சை அளித்தனர்.

Related Stories: