நீட் தேர்வுக்கு பயந்து அரியலூரில் மாணவி தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

அரியலூர்: அரியலூரில் நீட் தேர்வுக்கு பயந்து மாணவி தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் இருளர் தெருவை சேர்ந்தவர் நடராஜன். குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உமா. இவர்களது மகள் நிஷாந்தி (19). பிளஸ்2 முடித்துள்ளார். சிறுவயதில் இருந்தே டாக்டர் ஆக வேண்டும் என கனவில் இருந்து வந்தார். பெற்றோரிடம், நான் டாக்டராகி ஏழை மக்களுக்கு சேவை செய்வேன் என அடிக்கடி கூறி வந்துள்ளார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்த நிஷாந்தி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 600க்கு 539 மதிப்பெண் எடுத்திருந்தார். இதையடுத்து திருச்சியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் நிஷாந்தி சேர்ந்து நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். கடந்தாண்டு நடந்த நீட்தேர்வில் நிஷாந்தி தோல்வியடைந்தார். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறியதோடு, அடுத்த தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடலாம் என தேற்றினர். இதையடுத்து தொடர்ந்து நிஷாந்தி நீட் தேர்விற்காக படித்து வந்தார்.

இந்நிலையில் நாடு முழுவதும் இன்று  நீட் தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஆண்டில் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், இன்று நடைபெற இருந்த தேர்வை எதிர்கொள்ள நிஷாந்திக்கு பயம் ஏற்பட்டு மனஉளைச்சலில் இருந்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு தனது அறையில் நிஷாந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை குடும்பத்தினர் நிஷாந்தி தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதனர். தகவல் அறிந்த அரியலூர் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அவரது அறையில் இருந்த கடிதத்தை கைப்பற்றினர்.

அதில் மாணவி எழுதியிருந்ததாவது: அப்பா, அம்மா, நான் ஆசைபட்ட எல்லாத்தையும் வாங்கி குடுத்தீங்க. நீட் தேர்வுக்கு படிக்கணும்னு ஆசைப்பட்டேன் படிக்கவச்சீங்க. நானும் என்னால எவ்ளோ முடியுமோ படிச்சேன். என்னதான் நல்ல படிச்சிருந்தாலும் மனசுக்குள்ள பயம் இருக்கு. வேதியியல் மற்றும் உயிரியில் பாடங்கள் கடினமாக உள்ளதால் இந்த தற்கொலை முடிவை எடுத்துள்ளேன். அடுத்த ஜென்மத்தில், நான் கண்டிப்பாக மருத்துவராக வந்து உங்களது ஆசையை  நிறைவேற்றுவேன். அப்பா, நான் இது வரைக்கும் உங்ககிட்ட எதுவுமே கேட்டது இல்ல. முதல் முறையா கேக்குறேன். ப்ளீஸ் அப்பா பாரின்ல இருந்து  வந்துருங்கப்பா. இங்க தமிழ்நாடுல வந்து வேலை பண்ணுங்கப்பா. எல்லாத்துக்கும்  என்னை மன்னிச்சிரும்மா என்று எழுதியுள்ளார்.

Related Stories: