×

நீட் தேர்வு எழுத முற்படும் மாணவர்கள் தோல்வி பயத்தால் உயிரை போக்கி கொள்ளும் மனநிலைக்கு ஆளாக கூடாது: வைகோ வேண்டுகோள்

சென்னை: நீட் தேர்வு எழுத முற்படும் மாணவர்கள் தோல்வி பயத்தால் உயிரை போக்கி கொள்ளும் மனநிலைக்கு ஆளாக கூடாது என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: ‘நீட்’ தேர்வு பயத்தால், ஓசூர் அரசனட்டி பகுதியைச் சேர்ந்த முரளி கிருஷ்ணா தற்கொலை செய்து கொண்டார். அதேபோல, அரியலூரை சேர்ந்த நிஷாந்தினி, நாளை (இன்று) நடைபெற இருக்கும் ‘நீட்’ தேர்வுக்காக தயாராகி வந்த நிலையில், தோல்வி பயம் காரணமாக தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் ‘நீட்’ தோல்வி பயம் காரணமாக தற்கொலைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. ‘நீட்’ தேர்வு நடத்துவதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக்கோரி, தமிழக சட்டமன்றத்தில் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் பரிந்துரைக்கு இரண்டு முறை அனுப்பப்பட்டும் பயன் இல்லை. தமிழக ஆளுநரே ‘நீட்’ தேர்வுக்கு ஆதரவாகவும், தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாகவும் வெளிப்படையாக ஒன்றிய அரசின் முகவர் போன்று கருத்துகளை கூறி வருகின்றார்.

கல்வித்துறையில் மாநில அரசின் உரிமையை தட்டிப் பறித்து, ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வரும் ஒன்றிய பாஜ அரசின் போக்கு கடும் கண்டனத்துக்கு உரியது. இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகுமோ என்று தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்கி வருவதற்கு ஒன்றிய பாஜ அரசே பொறுப்பு ஏற்க வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ விலக்கு சட்ட முன்வரைவுக்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்துகின்றேன். ‘நீட்’ தேர்வு எழுத முற்படும் மாணவர்கள் தோல்வி பயம் காரணமாக உயிரைப் போக்கிக் கொள்ளும் மனநிலைக்கு ஆளாகக் கூடாது; தற்கொலை என்பது தீர்வு ஆகாது; மருத்துவப் படிப்பு இல்லாவிடில் வேறு துறைகளில் முயன்று படித்து வாழ்வில் உயர முடியும் என்ற நம்பிக்கையை நெஞ்சில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Vaiko , Students aspiring for NEET should not succumb to the fear of failure: Vaiko appeals
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...