×

சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன்: பைனலில் சிந்து

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார். அரையிறுதியில் தரவரிசையில் தன்னைவிட பின்தங்கியுள்ள ஜப்பான் வீராங்கனை சேனா காவகாமியுடன் (24 வயது, 38வது ரேங்க்) நேற்று மோதிய சிந்து 21-15, 21-7 என நேர் செட்களில் எளிதில் வென்றார். இப்போட்டி 32 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. மற்றொரு அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியை (25வயது, 30வது ரேங்க்) 21-14, 21-14 என நேர் செட்களில் வீழ்த்திய சீன வீராங்கனை ஜி யி வாங் (22 வயது, 11வது ரேங்க்) இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் பைனலில் பி.வி.சிந்து - ஜி யி வாங் மோதுகின்றனர். தரவரிசையில் தன்னை விட பின்தங்கியிருப்பவரை சந்திப்பதால், நீண்ட நாட்களுக்கு பிறகு பைனலில் விளையாடும் சிந்து பட்டம் வென்று அசத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நேருக்கு நேர்: சிந்து - ஜி யி வாங் இருவரும் இதற்கு முன் மார்ச் மாதம் நடந்த  ‘ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மின்டன்’ போட்டியின் முதல் சுற்றில் மோதினர். அதில் சிந்து 21-18, 21-13 என நேர் செட்களில் வாங்கை வென்றார்.

3வது பைனல்: சிந்து இந்த ஆண்டு விளையாட உள்ள 3வது சர்வதேச இறுதிப்போட்டி இது. ஏற்கனவே ஜனவரியில் சையத் மோடி சர்வதேச ஓபன் போட்டியிலும், மார்ச்சில் நடந்த ஸ்விஸ் ஓபன் போட்டியிலும் அவர் பைனல் வரை முன்னேறினார். அந்த 2 போட்டியிலும் அபாரமாக விளையாடிய சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், இன்று 3வது பைனலில் களம் காண்கிறார்.

Tags : Singapore Open Badminton , Singapore Open Badminton: Sindhu in final
× RELATED சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன்: சிந்து சாம்பியன்