புதுடெல்லி: ‘வார்த்தை ஜால அரசியலை நிறுத்தி விட்டு பொருளாதார சீர்திருத்தங்களை உடனே செய்யுங்கள்,’ என ஒன்றிய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு: மோடி பிரதமராவதற்கு முன் இந்திய ரூபாயின் மதிப்பு குறித்து பல்வேறு பிரசாரங்களை செய்துள்ளார். ஆனால், அவர் பதவிக்கு வந்த பின் போலியான பாசாங்குதனத்தால் 75 ஆண்டுகளில் இல்லாத அளவு நாட்டை பின்னோக்கி தள்ளிவிட்டார். வரலாற்றில் இல்லாத அளவில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு பலவீனமடைந்து 80 ரூபாயை எட்டியுள்ளது. ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. திசையற்ற ஒன்றிய அரசால் இனி வரும் காலங்களில் நாட்டு மக்கள் இதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். ரூபாயின் மதிப்பை பலப்படுத்துவதற்கு வலிமையான பிரதமர் தேவை என்று மோடி முன்னர் ஒரு முறை சொன்னார். அதன் உண்மை நிலைமை அனைவரின் கண் முன்னே இப்போது இருப்பதை காணலாம். ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இன்னும் கால அவகாசம் உள்ளது. கும்பகர்ண துாக்கத்தில் இருந்து எழுந்திருங்கள். பொய் மற்றும் வார்த்தை ஜால அரசியலை நிறுத்தி விட்டு பொருளாதார சீர்திருத்தங்களை உடனே மேற்கொள்ளுங்கள்.