×

டிவிட்டர் - எலான் மஸ்க் மோதல் தீர்ப்பு யார் பக்கம்? உலகளவில் பரபரப்பாகி வரும் கணிப்புகள்

வாஷிங்டன்: சமூக வலைதளமான டிவிட்டரை வாங்கும் ஒப்பந்த விவகாரத்தில், வழக்கை விசாரிக்கும் டெலாவேர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பது குறித்து இப்போதே உலகளவில் பரபரப்பான யூகங்கள் வெளியாகி வருகின்றன. உலகின் முன்னனி பணக்காரராரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மாஸ்க், சமூக வலைதளமான டிவிட்டரை ரூ.3.50 லட்சம் கோடிக்கு வாங்குவதாக கடந்த ஏப்ரலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.  ஆனால், டிவிட்டரில் உள்ள போலி கணக்குகள் பற்றிய விபரங்களை அந்நிறுவனம் தராததால், ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் கடந்த வாரம் அறிவித்தார். இதையடுத்து, ஒப்பந்தத்தை மீறிய அவர் மீது டிவிட்டர் நிர்வாகம், அமெரிக்காவில் உள்ள டெலாவேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கை கார்ப்போரேட் வர்த்தக நிறுவனங்களின் வழக்குகளை விசாரிக்கும் கேத்தலீன் மெக்கார்மிக் விசாரிக்க உள்ளார். இந்த வழக்கை செப்டம்பர் மாதம் 4 நாட்கள் நடத்தும்படி நீதிபதி கேத்தலீனுக்கு டிவிட்டர் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், மிக குறுகிய கால அவகாசம் உள்ள இது போன்ற சிக்கல் நிறைந்த வழக்கில் கேத்தலீன் என்ன முடிவு எடுப்பார் என்பது உலகளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருக்கும்? இதை பற்றிய யூகங்கள் பல்வேறு மட்டத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. டிவிட்டர் - எலான் மஸ்க் மோதல் வழக்கில் கேத்தலீன் அளிக்கும் தீர்ப்புக்குப் பிறகு, இருதரப்பும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என கூறப்படுகிறது.

இதனிடையே, டிவிட்டர் நிறுவனம் கடந்த செவ்வாயன்று தாக்கல் செய்த 241 பக்க மனுவில், ‘எலாக் மஸ்க் ஒப்பந்த விதிகளை தொடர்ந்து மீறி வந்தார். அவர் தலைமை நிர்வாகியாக இருக்கும் டெஸ்லாவில் மின்சார வாகன தயாரிக்கும் பிரிவின் பங்குகளில் ஏற்பட்ட சரிவால் நஷ்டம் அடைந்துள்ளார். இதன்  காரணமாக டிவிட்டரை வாங்குவதில் இருந்து அவர் பின்வாங்கி உள்ளார்,’ என்று குற்றம்சாட்டி உள்ளது. அதே நேரம், ‘போலி கணக்குகள் பற்றிய முழுமையான தகவல், விவரங்களை அளிக்காமல் டிவிட்டர் ஒப்பந்த விதி மீறலில் ஈடுபட்டது,’ என்று மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.

* டெஸ்லா நிறுவனத்திடம் இருந்து ரூ.4.45 லட்சம் கோடி இழப்பீடு கேட்டு, மஸ்க் மீது அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் தொடர்ந்துள்ள வழக்கையும் நீதிபதி கேத்தலீன் தான் விசாரித்து வருகிறார். வரும் அக்டோபர் மாதம் இந்த விசாரணை நடைபெற உள்ளது.

* டைம், எனர்ஜி வேஸ்ட்
மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `டிவிட்டர் - எலான் மஸ்க் ஒப்பந்தத்தினால் நேரம், ஆற்றல் மற்றும் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. செய்திகளை பகிர்வதற்கு டிவிட்டர் இன்றியமையாதது. இதனை பட்டியலிடப்பட்ட சமூக வலைதள நிறுவனமாக, லாபத்திற்காக நடத்த முடியாது,’ என்று தெரிவித்துள்ளார்.

*மஸ்க்கின் தந்தை மன்மத ராசா...
எலான் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க்கிற்கு தற்போது 73 வயது. இவர் தன்னை விட 41 வயது குறைவான தனது வளர்ப்பு மகளான ஜானா பெசயுடின்ஹாட்டையே (35) மனைவியாக்கி கொண்டிருக்கிறார். இதன் மூலம், எலியட் ரஷ் என்ற பெண் குழந்தைக்கு தந்தையாகி இருக்கிறார். சமீபத்தில் இங்கிலாந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இதனை கூறிய அவர், 2018ம் ஆண்டிலேயே ஜானா மூலம் ஒரு ஆண் குழந்தையையும் பெற்றிருப்பதாக கூறி அதிர்ச்சியை மேலும் அதிகமாக்கி இருக்கிறார்.

Tags : Twitter ,Elon Musk , Whose side is the Twitter - Elon Musk conflict ruling on? Predictions that are becoming increasingly popular worldwide
× RELATED X தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள்...