×

குற்றவியல் நடைமுறையில் சிக்கல் இந்திய சிறைகளில் வாடும் 80% விசாரணை கைதிகள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை

ஜெய்ப்பூர்: சிறைகள் கருப்பு பெட்டிகளாக இருப்பதாக குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, 80 சதவீதம் பேர் விசாரணை கைதிகளாக தவிப்பதாகவும் வேதனை தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் 18ம் ஆண்டு கூட்டத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: நாட்டில் உள்ள 1,378 சிறைகளில் 6.1 லட்சம் கைதிகள் உள்ளனர். இவர்களில் 80 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள் ஆவர். இந்த விஷயத்தில் சிறைகள் ‘கருப்புப் பெட்டி’களாக உள்ளன. இதில் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மீது சிறைச்சாலைகள் வேறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. விசாரணை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது மட்டுமே இலக்காக இருக்கக் கூடாது.

அதே சமயம், எந்த விசாரணையும் இன்றி அதிக எண்ணிக்கையில் நீண்ட கால சிறைவாசத்திற்கு வழிவகுக்கும் நடைமுறைகளை எதிர்த்து நாம் கேள்வி கேட்க வேண்டும். குற்றவியல் அமைப்பின் இத்தகை செயல்முறையே ஒரு தண்டனையாகும். இந்த சிக்கலை தீர்ப்பதில் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் கவனம் செலுத்த வேண்டும். நாட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5 கோடியாக அதிகரித்துள்ளதாக சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ கவலை தெரிவித்தார். இந்த விஷயத்தில் தீர்வு காண வேண்டுமெனில், நீதித்துறையில் உள்ள நீதிபதிகள் காலி இடங்களை நிரப்ப வேண்டும், நீதித்துறை கட்டமைப்பில் தேவையான சீர்த்திருத்தங்களை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* எதிர்க்கட்சிகள் விரோதிகள் அல்ல
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய ரமணா, ‘அரசியலில் எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சிக்கு விரோதிகளாக மாறக்கூடாது. ஆனால், தற்போது இதை நாம் வருத்தத்துடன் பார்த்து வருகிறோம். இது ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அறிகுறிகள் அல்ல. முன்பு, அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே பரஸ்பர மரியாதை இருந்தது. தற்போது அதுவும் குறைந்து வருகிறது. நாடாளுமன்றத்தில் விரிவான விவாதங்கள், ஆய்வுகள் இன்றி சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன,’ என வேதனை தெரிவித்தார்.

Tags : Supreme Court ,Chief Justice ,Angham , Problem in criminal procedure 80% of undertrials languish in Indian jails: Supreme Court Chief Justice Angham
× RELATED எதிர்கட்சிகளின் அழுத்தம், சுப்ரீம்...