×

2002 கலவரத்திற்குப் பிறகு மோடி அரசை கலைப்பதற்கு அகமது படேல் சதி செய்தார்: குஜராத் போலீஸ் அறிக்கை: காங்கிரஸ் கடும் கண்டனம்

புதுடெல்லி: ‘குஜராத் கலவரத்திற்குப் பிறகு மோடி தலைமையிலான பாஜ ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய மறைந்த காங்கிரஸ் தலைவர் அகமது படேல் மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டினார்’ என குஜராத் போலீஸ் திடீரென அறிக்கை சமர்ப்பித்து உள்ளது. குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் இருந்து, அப்போதைய மாநில முதல்வரான பிரதமர் மோடி விடுவிக்கப்பட்டது செல்லும் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து பேசிய வந்த சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட்டை குஜராத் போலீசார் கைது செய்தனர். அவர் ஜாமீன் கோரிய வழக்கில், அகமதாபாத் நீதிமன்றத்தில் குஜராத் போலீசார் நேற்று முன்தினம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். அதில், ‘குஜராத் கலவரத்திற்குப் பிறகு பாஜ அரசை டிஸ்மிஸ் செய்ய மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் தீட்டிய பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக தீஸ்தா செதல்வாட் செயல்பட்டார்’ என கூறிப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட வகுப்புவாத படுகொலைக்கு பொறுப்பேற்பதில் இருந்து முழுமையாக தன்னை விடுவித்துக் கொள்ளும் பிரதமர் மோடியின் வழக்கமான உத்தியின் ஒரு பகுதிதான் இது. பிரதமரின் பழிவாங்கும் அரசியல், மறைந்த அரசியல் தலைவர்களைக் கூட விட்டு வைக்கவில்லை. இது மிகவும் மோசமான, ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு. சிறப்பு புலனாய்வு குழு தனது அரசியல் எஜமானரின் தாளத்திற்கு ஏற்ப ஆடுகிறது. சொல்கிற இடத்தில் அவர்கள் உட்காரக் கூடியவர்கள். கலவரத்தில் முதல்வருக்கு தொடர்பில்லை என அறிக்கை தந்த முந்தைய சிறப்பு புலனாய்வு குழவின் தலைவர், எப்படி தூதரக பணியை பெற்றார் என்பது எங்களுக்குத் தெரியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மிகவும் நெருக்கமான அரசியல் ஆலோசகராக அகமது படேல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Ahmed Patel ,Modi ,riots ,Gujarat ,Congress , Ahmed Patel conspired to topple Modi govt after 2002 riots: Gujarat police report: Congress slams
× RELATED மணிப்பூர் கலவரத்தில் இறந்தவர்களுக்கு...