2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்த 141 தொகுதிகளுக்கு ஒன்றிய அமைச்சர்கள் நியமனம்; 2024ம் ஆண்டு தேர்தலுக்கு ஆயத்தமானது பாஜக

புதுடெல்லி: கடந்த பொதுத் தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த 141 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காக, ஒன்றிய அமைச்சர்கள் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் வரும் 2024ம் ஆண்டில் நடைபெறவுள்ள லோக் சபா தேர்தலுக்கு பாஜக ஆயத்தமாகி வருகிறது. பிரதமர் மோடியின் இரண்டாவது ஐந்தாண்டு ஆட்சியின் மூன்றாண்டுகள் நிறைவடைந்த நிலையில், வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான வியூகத்தை அக்கட்சி வகுக்கத் தொடங்கியது. இதன் கீழ், கடந்த முறை அதாவது 2019 மக்களவைத் தேர்தலில் தோற்ற மற்றும் குறைந்த ஓட்டில் தோற்ற 141 தொகுதிகளை அடையாளங்கண்டு, அந்த இடங்களில் வெற்றி பெறுவதற்கான வேலைகளில் பாஜக இறங்கியுள்ளது. உத்தரபிரதேசத்தில் மட்டும் தோல்வியடைந்த 14 தொகுதிகளை கண்காணிக்க நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த பட்டியலில் ஒன்றிய ரயில்வே அமைச்சர்கள் அஸ்வனி வைஷ்ணவ், நரேந்திர சிங் தோமர், ஜிதேந்திர சிங், மாநில அமைச்சர் அன்னபூர்ணா தேவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு இமாச்சல பிரதேசத்தில் உள்ள லூதியானா, சங்ரூர், மண்டி தொகுதிகளும், ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு பஞ்சாபில் உள்ள ஆனந்த்பூர் சாஹிப் தொகுதிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் புல்தானா மற்றும் அவுரங்காபாத் தொகுதிகளுக்கு அமைச்சர் பூபேந்தர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்றிய அமைச்சர் மகேந்திர நாத் பாண்டேவுக்கு தெலங்கானா மாநிலம் நல்கொண்டா, மஹ்பூப்நகர் மற்றும் நாகர்கர்னூல் தொகுதிகளும், மற்றொரு ஒன்றிய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலாவுக்கு தெலங்கானாவில் உள்ள அடிலாபாத், பெடபள்ளி, ஜாஹிராபாத் ஆகிய தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் பிரஹலாத் படேலுக்கு சட்டீஸ்கரின் ராய்கர் தொகுதியும், ஜார்கண்டில் உள்ள கிரிதிஹ் தொகுதியும் வழங்கப்பட்டுள்ளன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதியும், மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா, சட்டீஸ்கரின் கோர்பாவை ஒன்றி அமைச்சர் கிரிராஜ் சிங்கையும் கவனிப்பார்கள். ஒன்றிய அமைச்சர் அஸ்வினி சவுபேக்கு கேரளாவின் திருச்சூர் தொகுதி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்ற மாநிலங்களில் உள்ள தொகுதிகளுக்கு ஒன்றிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு அமைச்சரும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு சென்று தொடர்ந்து பணியாற்றி வியூகங்கள் வகுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: