×

உக்ரைனின் வின்னிட்சியா பகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 23 பேர் உயிரிழப்பு


கீவ்: உக்ரைனின் வின்னிட்சியா பகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 23 பேர் உயிரிழந்த நிலையில், இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக கீவ், கார்க்கீவ் போன்ற முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் பெரும்பாலான மக்கள் வின்னிட்சியா போன்ற நகரங்களில் தஞ்சம் அடைந்தனா். ஆனால், 3லட்சத்து 70 ஆயிரம் பேர் வசித்து வந்த வின்னிட்சியா பகுதியில் ரஷ்யா நேற்று முன் தினம் இரவு திடீரென வான்வெளி தாக்குதல் நடத்தியது. அப்போது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலில் அங்குள்ள குடியிருப்புகள், மருத்துவமனை, கலாச்சார மையம் தரைமட்டமானதாக உக்ரைன் தொிவித்துள்ளது. இதில் 3 குழந்தைகள் உட்பட 23 போ் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 4 வயதான சிறப்பு குழந்தை ஒன்று உயிரிழந்த தகவல் அனைவரையும் அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லிஷா என்ற அந்த குழந்தையை அவரது தாய் போர் தொடங்கிய பிறகு வின்னிட்சியாவுக்கு அழைத்து வந்துள்ளாா். பாதுகாப்பாக இருப்பதற்காக அவா்கள் அங்கு வந்துள்ள நிலையில் லிஷா தற்போது ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்துள்ளாா். அவரது தாய் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா். குழந்தை லிஷாவின் ரத்தம் படிந்த பேபி ஸ்டோலரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஐரோப்பிய ஒன்றியம், அமொிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தொிவித்துள்ளது. இதனை போர் குற்றம் என அந்த நாடுகள் கண்டித்துள்ளன. இதற்கு விளக்கம் அளித்துள்ள ரஷ்யா மக்கள் வசிக்கும் இடத்தில் தாக்குதல் நடத்தவில்லை என தொிவித்துள்ளது. உக்ரைன் படைகள், ஆயுதங்கள் வாங்குவதற்கு வெளிநாடுகளுடன் கூட்டம் நடத்தி வந்த கட்டிடத்தின் மீதுதான் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா தொிவித்துள்ளது. எனினும், அதை ஏற்க மறுத்த உக்ரைன், திட்டமிட்டு பொதுமக்களை கொல்லும் நோக்குடன் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தொிவித்துள்ளது.



Tags : Russia ,Ukraine ,Vinnitsia , Vinnytsia, Russia, attack, children, casualties
× RELATED கார்கிவ் நகரில் ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல்: உக்ரைனில் பதற்றம்!