×

செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க சென்னை வரும் வீரர்களுக்கு கொரோனா, குரங்கு அம்மை பரிசோதனை : தமிழக அரசு செக்

சென்னை : செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடரில் பங்கேற்க சென்னை வரும் வீரர்களுக்கு கொரோனா, குரங்கு அம்மை பரிசோதனை செய்ய தமிழக மருத்துவத்துறை திட்டமிட்டுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28ம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில், 187 நாடுகளை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதனிடையே இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், அண்மையில் சர்வதேச நாடுகளில் இருந்து வந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பும் உறுதி செய்யப்பட்டது. இதன் எதிரொலியாக குரங்கு அம்மை குறித்து தீவிரமாக கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடரில் பங்கேற்க சென்னை வரும் வீரர், வீராங்கனைகளுக்கு கொரோனா மற்றும் குரங்கு அம்மை பரிசோதனை மேற்கொள்ள மருத்துவத்துறை திட்டமிட்டுள்ளது. அந்த பரிசோதனையில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே செஸ் போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் என்றும், ஒருவேளை பரிசோதனையில் தொற்று உறுதியானால் வீரர்களுக்கு சிகிச்சை வழங்கவும் மருத்துவத் துறை திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் குரங்கு அம்மை தொடர்பாக கட்டுப்பாட்டு அறை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல் செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.கொரோனா அதிகரித்துள்ள நிலையில், முழுமையான வழிகாட்டுதல்  பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு வீரர்களை சென்னை விமான நிலையத்தில் பரிசோதனை செய்த பிறகு நட்சத்திர விடுதியில் தங்க வைக்கவும், வீரர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நட்சத்திர விடுதிகளில் நோய் பரவல் ஏற்படாமல் இருக்க கண்காணிக்கும் பணியை மேற்கொள்ளவும் மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.


Tags : Chennai ,Chess Olympiad ,Monkey Moose Experiment ,Tamil , Chess, Olympiad, Corona, Monkey Measles, Testing, Government of Tamil Nadu
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...