×

'வார்த்தை தடை'சர்ச்சையை தொடர்ந்து அடுத்த அதிரடி.. நாடாளுமன்றத்தில் துண்டு பிரசுரங்கள், பதாகைகள், போஸ்டர்களுக்கு தடை!!

புதுடெல்லி: நாடாளுமன்ற இரு அவைகளிலும் துண்டு பிரசுரங்கள், பதாகைகள், போஸ்டர்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டங்களில் உறுப்பினர்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள வார்த்தைகள் என மிகப்பெரிய பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், பல்வேறு கட்சியின் உறுப்பினர்கள் தடை விதிக்கப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்துவோம் என்று அறிவித்துள்ளனர். இந்த சலசலப்பு அடங்குவதற்குள் மற்றொரு புதிய தடையை மாநிலங்களவை செயலகம் அறிவித்தது.

மாநிலங்களவை செயலாளர் பி.சி.மோடி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டங்கள், தர்ணா, உண்ணாவிரதம் போன்றவற்றில் ஈடுபடுவதற்காக நாடாளுமன்ற வளாகத்தை பயன்படுத்துவதற்கு  தடை விதிக்கப்படுகின்றது. மேலும், எந்த மத ரீதியான நிகழ்ச்சிகளுக்கும் நாடாளுமன்ற வளாகத்தை பயன்படுத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.பொதுவாக, நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது நாடாளுமன்ற வளாகத்திலும்., அங்குள்ள காந்தி சிலையின் முன்பாகவும் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் தனியாகவும், பிற கட்சிகளோடு இணைந்தும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவார்கள். இந்நிலையில், இந்த போராட்டங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில்,  நாடாளுமன்ற இரு அவைகளிலும் துண்டு பிரசுரங்கள், பதாகைகள், போஸ்டர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக வெளிவந்துள்ள அறிவிப்பானது எதிர்க்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கடும் கண்டம் தெரிவித்துள்ளனர்.கடந்த கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். பதாகைகளை கிழித்தெறிந்து தர்ணாவிலும் அவை உறுப்பினர்கள் ஈடுபட்டனர். எனவே இதனை கருத்தில் கொண்டே இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



Tags : Controversy, Parliament, Pamphlets, Banners, Poster
× RELATED பிரதமர் நரேந்திர மோடியின் குற்றத்தை...