×

மதுராந்தகம் பை-பாஸ் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடையின்றி பயணிகள் தவிப்பு: சாலையில் காத்திருக்கும் அவலம்

மதுராந்தகம்: மதுராந்தகம் பை-பாஸ் ஏரிக்கரை பஸ் நிறுத்தத்தில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேல் மருவத்தூர் - செங்கல்பட்டு மார்க்கத்தில் பயணிகள் நிழற்குடையின்றி பொதுமக்கள் சாலையில் பஸ்சுக்காக காத்திருக்கும் அவலநிலை காணப்படுகிறது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் பை-பாஸ் பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. விழுப்புரம், திருச்சி, தஞ்சை, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இந்த நிறுத்தத்தில் நின்று செல்கின்றன.

மதுராந்தகம் மட்டுமல்லாமல், அதனை சுற்றியுள் 50க்கும் மேற்பட்ட கிராமமங்களை சேர்ந்தவர்கள் இந்த பேருந்து நிறுத்தம் வந்து இங்கிருந்து செங்கல்பட்டு மார்க்கமாக அரசு வேலை, தனியார் கம்பெனி, பள்ளி, கல்லூரி, வீட்டு சுப நிகழ்ச்சிகள் என பல்வேறு காரணங்களுக்காக செல்கின்றனர். இந்நிலையில், இந்த நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாதால் பயணிகள் பஸ்சுக்காக சாலையில் காத்திருக்கும் நிலை உள்ளது. மேலும், வெயில் மழை காலங்களில் சிரமப்படுகின்றனர். குறிப்பாக காலை மாலை நேரங்களில்  பயணிகள் சாலையில் நிற்பதால் போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது.

இதே நிறுத்தத்தில், சென்னை - திருச்சி மார்க்கமாக உள்ள நிறுத்தத்தில் பயணிகள் வசதிக்காக 20 வருடங்களுக்கு முன்பாக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், திருச்சி - சென்னை மார்க்க நிறுத்தத்தில் மட்டும் இதுவரை நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால், பயணிகள் பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை பயணிகள் கோரிக்கை மனு அளித்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

இது குறித்து பயணிகள் கூறியதாவது: மதுராந்தகம் நகரை ஒட்டி, ஏரிக்கரை பகுதியில் சென்னை - திருச்சி மார்க்கத்தில் பயணிகளுக்காக பஸ் நிறுத்தம் கடந்த 20 வருடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டது. இதனால், மதுராந்தகத்திலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கி செல்லும் பயணிகள் இந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று பஸ் ஏறி செல்வது வழக்கம். ஆனால், அதன் மறு மார்க்கத்தில், அதாவது திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பயணிகள் நிற்பதற்கான பேருந்து நிழற்குடை கட்டப்படவில்லை. இதனால், சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினம்தோறும் செல்லும் பயணிகள் அவதிகுள்ளாகின்றனர்.

பயணிகள், பஸ் ஏறுவதற்காக காத்திருக்கும்போது, பஸ்கள் நிற்கும் இடத்திலிருந்து சற்று தள்ளி பயணிகள் நிற்பதற்கு கூட இட வசதி இல்லை. எனவே, பயணிகளை ஒட்டி பஸ்கள் வந்து நிற்பது வழக்கம். இதனால், விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி மழை காலங்களிலும், வெயில் நேரங்களிலும் பொதுமக்கள் இது போன்ற இயற்கையின் இன்னல்களை தாங்கியவாரே, அங்கு பஸ் பிடிப்பதற்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், சிகிச்சைக்காக மருத்துவமனை செல்வோர், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருமே  பாதிக்கப்படுகின்றனர். அந்த பகுதியானது பயணிகள் காத்திருப்பதற்காக போதிய இடவசதியுடன் கூடிய பஸ் நிறுத்தம் கட்டுவதற்கு நல்ல இடவசதி உள்ளது. இது ஏரிக்கரையை ஒட்டிய பகுதி என்பதால் அங்கு பெரிய அளவிலான பயணிகளுக்கான பேருந்து நிறுத்தம் அமைக்க முடியும். அப்படி கட்டப்பட்டால், மழை மற்றும் வெயிலில் இருந்து தப்பிக்க முடியும். நிழற்குடை அமைத்தால் மதுராந்தகம் மட்டுமல்லாது இந்த பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தும் ஏராளமான பயணிகளுக்கு வசதியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நடை மேம்பலம் அமைக்கப்படுமா?
மதுராந்தகம் புறவழி சாலையில் சென்னை நோக்கி பயணம் செய்பவர்கள் முக்கியமான இந்த தேசிய நெடுஞ்சாலையை குறுக்காக கடந்து சென்று மறுபுறத்தில் நின்று பஸ் பிடிக்க வேண்டும்.  அதிகப்படியான வாகனங்கள் அதிக வேகத்தில் செல்லும் சாலையாக இந்த தேசிய நெடுஞ்சாலை உள்ளதால் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது. குறிப்பாக ‘பீக் அவர்ஸ்’ எனப்படும் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் ஒருவர் இங்கு பணியில் அமர்த்தப்பட வேண்டும். இங்கு ஏற்படும் விபத்துகளை தவிர்க்க பயணிகள் சாலையை கடக்க நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என பயணிகள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Madurandam , Madhuranthakam By-Pass, Bus Stand, Nizhalkudai,
× RELATED மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதியதில் ஒருவர் பலி