எல்ஐசியின் மொத்த மதிப்பு 5.41 லட்சம் கோடி ரூபாய்

சென்னை: எல்ஐசி நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ.5.41 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. எல்ஐசி நிறுவனம் இந்திய எம்பெட் மதிப்பு முறையில் மில்லிமேன் அட்வைசர்ஸ் எல்எல்பி நிர்ணயம் செய்த, நிறுவன மொத்த மதிப்பை  வெளியிட்டுள்ளது.  இதன்படி, இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு கடந்த மார்ச் 31ம் தேதியின்படி, ரூ.5,41,492 கோடியாக உள்ளது.  முந்தைய நிதியாண்டு முடிவில், அதாவது 2021 மார்ச் 31ம் தேதிப்படி இந்த மதிப்பு ரூ.95,605 கோடியாகவும், 2021 செப்டம்பர் 30ம் தேதிப்படி ரூ.5,39,686 கோடியாகவும் இருந்தது.  

 மேலும், கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டில், புதிய வர்த்தகங்களின் மதிப்பு ரூ.7,619 கோடி. இது 2021 மார்ச் 31ம் தேதி ரூ.4,167 கோடியாகவும், , கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிந்த அரையாண்டில் ரூ.1,583 கோடியாகவும் இருந்தது.  இதுபோல், ஆண்டு பிரீமியம் வசூல், கடந்த நிதியாண்டில் ரூ.50,390 கோடியாக இருந்தது. முந்தைய நிதியாண்டில் இது ரூ.45,588 கோடி.

இதுபோல், கடந்த நிதியாண்டில் தனிநபர்கள் மூலமான பிரீமியம் ரூ.35,572 கோடியாகவும், குழு பிரீமியம் மூலம் ரூ.14,818 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆண்டு பிரீமியத்தில் தனிநபர்களின் பங்களிப்பு 70.59 சதவீதமாகவும், குழு காப்பீடு பங்களிப்பு 29.41 சதவீதமாகவும் உள்ளது என, எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories: