×

அதிமுக தலைமை அலுவலகம் முன் கலவரம் நடந்த விவகாரம் பிரச்னை முடியும்வரை அலுவலகம் பூட்டியே இருக்க வேண்டும்: ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு வாதம்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் தொடர்பான பிரச்னை முடியும்வரை அலுவலகம் பூட்டியே இருக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி நடந்த கலவரத்தை தொடர்ந்து தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி சதீஷ்குமார் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதி, சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையையும், வீடியோ ஆதாரங்களையும் தாக்கல் செய்யுமாறு காவல்துறை தரப்புக்கு உத்தரவிட்டார்.வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் சம்பவம் தொடர்பான அறிக்கையும், வீடியோ ஆதாரங்களும் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், முகமது ரியாஸ் ஆகியோரும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஏ.ரமேஷ், அரவிந்த் பாண்டியன், வழக்கறிஞர் திருமாறன் ஆகியோரும் ஆஜராகினர். காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் நேரத்தில் கல்வீச்சில் இருதரப்பினரும் இறங்கினர். இதில் பொது சொத்துகள் சேதமாகின.  தற்போது இரு தரப்பினருக்கும் இடையில் சமாதானம் ஏற்படவில்லை. மீண்டும் பிரச்னை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால் பொது அமைதி, மக்கள், பள்ளி குழந்தைகள் ஆகியோரின் பாதுகாப்பு கருதி சீல் வைத்த உத்தரவை ரத்து செய்யக் கூடாது. பொது சொத்துகள் சேதம் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இழப்பீட்டை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாதிட்டார்.

 எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், கட்சி அலுவலகம் ஓபிஎஸ்சுக்கு சொந்தமானதாக இருந்தால் அவர் ஏன் அலுவலக கதவை உடைத்து கோப்புகளை எடுத்து செல்ல வேண்டும். சம்பவம் நடந்த தேதியில் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை பன்னீர்செல்வம் தனது மனுவில் ஒப்புக் கொண்டுள்ளார் என்று வாதிட்டார்.

 பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஏ.ரமேஷ், அரவிந்த் பாண்டியன் ஆகியோர்  கட்சி அலுவலகத்தின் உரிமை யாருக்கு என்பதை உரிமையியல் நீதிமன்றம் தான் முடிவு செய்ய முடியும். கட்சி அலுவலகம் யாரிடம் இருக்கிறது என்றுதான் ஆர்.டி.ஓ பார்க்க வேண்டுமே தவிர யாருக்கு உரிமை உள்ளது என்பதை தீர்மானிக்க முடியாது. சர்ச்சையை நீதிமன்றத்தால் மட்டுமே தீர்க்க வேண்டும். அதுவரை அலுவலகத்தை மூடி வைத்திருக்கலாம்.

பொதுக்குழு நடக்கும் போது மாநிலம் முழுவதும் இருந்து கட்சியினர் வருவர் என்பதால், கட்சி அலுவலகத்தை பூட்டி வைக்கும் பழக்கம் இல்லை. அதன் அடிப்படையில்தான் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அங்கு சென்றார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பின் நான்கு மாவட்ட செயலாளர்கள் வெளியில் அமர்ந்து கொண்டு உள்ளே நுழைவதை தடுத்துள்ளனர். கட்சி அலுவலகத்திற்குள் நுழைய முடியாது என்று எந்த நீதிமன்றமும் கூறவில்லை. பொதுக்குழுவுக்கு அனுமதியளித்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளோம் என்று வாதிட்டனர்.

 அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காவல் துறை அறிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து மனுதாக்கல் செய்ய பன்னீர்செல்வம் தரப்புக்கு திங்கட்கிழமை வரை அவகாசம் வழங்கி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு
கடந்த 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கிய உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பி.எஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், ‘‘கடந்த 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை. அதனால் பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Riot ,AIADMK ,OPS ,ICourt , AIADMK Head Office, I Court, OPS,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்...