×

எட்டப்பரை அவதூறாக பேசுவதா? எடப்பாடியை கண்டித்து போராட்டம்: ராஜகம்பள நாயக்கர் சமுதாய நலச்சங்கம் அறிக்கை

எட்டயபுரம்: எட்டயபுரம் மன்னர் எட்டப்பரை அவதூறாக பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு சில்லவார் ராஜகம்பள நாயக்கர் சமுதாய நலச்சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு முடிந்து எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில் பேசும்போது ‘நம்மிடத்தில் இருந்த எட்டப்பர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டது’ என்றார்.
 
இது குறித்து தமிழ்நாடு சில்லவார் ராஜகம்பள நாயக்கர் சமுதாய நலச்சங்கம் சார்பில் அதனுடைய தலைவர் நற்கலைக்கோட்டை ஆண்டிச்சாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:
  முன்னாள் முதல்வர் பழனிசாமி அதிமுகவில் நடக்கும் பதவிச்சண்டையில் ஓ.பன்னீர்செல்வம் குறித்து எட்டப்பன் பரம்பரை என்ற சொல்லை தவறாக பயன்படுத்தியுள்ளார். அவர் வரலாறு தெரியாமல் எட்டயபுரம் மன்னர் குறித்து அவதூறாக பேசியுள்ளார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடந்த பிரச்னை மேலும் திரைப்படத்தில் வெளிவந்த வசனங்களை முன்னுதாரணமாக கொண்டு எட்டயபுரம் மன்னர் பரம்பரையை துரோகத்தின் அடையாளமாக பயன்படுத்துவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும் எட்டயபுரம் சமஸ்தானத்தில் 26 கிராமங்கள் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் எட்டயபுரம் மன்னர்களின் பரம்பரையாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம். எட்டயபுரம் பகுதியில் கலை இலக்கியம் நாடகம் என முத்தமிழையும் வளர்க்க பாடுபட்டவர்கள் எட்டயபுரம் மன்னர்கள். குறிப்பாக பாரதி, முத்துசுவாமி தீட்ஷிதர், உமறுப்புலர் போன்ற புலவர்களை ஆதரித்ததோடு எத்தனையோ பல நற்பணிகளை செய்தவர்கள் எங்கள் மன்னர்கள்.

இந்நிலையில் எங்களையும் எங்கள் மன்னரையும் அவமதிக்கும் விதமாக பேசிய அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளர் பழனிசாமிக்கு எங்கள் கண்டனத்தை தெரிவிக்கிறோம்.  எட்டயபுரம் மன்னரை இழிவாக பேசிய இபிஎஸக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் போராட்டமும் நடத்துவோம் என்றார்.

Tags : Edappadi ,Rajakampala Nayak Community Welfare Association , Ettapar, Edappadi Palaniswami, Protest, Rajakambala Nayakar Community Welfare Association report
× RELATED கேரளாவில் எடப்பாடி ரகசிய பூஜை 5 நாட்களுக்கு பின் வீடு திரும்பினார்