×

என்ன செய்வது தோழி? - மகள் வாழ்விலுமா அரசியல்?

நன்றி குங்குமம் தோழி

அன்புடன் தோழிக்கு,

எனக்கு 2 மகள்கள். மூத்த மகள் 21 வயது கல்லூரி இறுதி ஆண்டு படிக்கிறாள். அடுத்து 2வது மகள் 15 வயது 10ம் வகுப்பு படிக்கிறாள். இருவரும் நன்றாக படிப்பவர்கள். கூடவே புத்திசாலிகள். ஆனால் படிப்பை தவிர வீட்டு வேலைகளில் உதவி செய்ய மாட்டார்கள். ஒழுங்காக படிப்பதால் அதை நான் கண்டு கொள்வதில்லை.

என் வீட்டுக்காரர் காண்டிராக்டர். கூடவே விவசாயப் பண்ணையும் உள்ளது. அதெல்லாம் பகுதிநேர தொழில்கள். அரசியல்தான் முழுநேர தொழில் என்பதால் வசதியான வாழ்க்கை. மகள்கள் அப்பாவை விட என்னிடம்தான் நெருக்கமாக இருப்பார்கள். ஏதாவது வேண்டும் என்றாலும் என்னிடம்தான் கேட்பார்கள். இந்த கொரோனா காலத்தில் எல்லோரும் வீட்டிலேயே இருந்ததால் உறவினர்களுடன் அடிக்கடி செல்போனில் பேசுவோம். அப்படித்தான் எனது கடைசி சித்தப்பா குடும்பத்துடனும் பேசினோம். அதன் பிறகு அவர்களும் எங்களுடன் அடிக்கடி
பேசினர்.

அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். என்னை தூக்கி வளர்த்தவர். அவருக்கும் எனக்கும் 12வயதுதான் வித்தியாசம். அவருக்கு நான் மிகவும் செல்லம். என்னை வாடா, போடா என்று ‘டா’ சொல்லிதான் அழைப்பார். அவருக்கு திருமணமாகி, வெளி மாநிலத்தில் வேலை கிடைத்து சென்றுவிட்டார். அவருடன் பெரிய அளவில் தொடர்பு இல்லை என்றாலும் என் பிறந்தநாளுக்கு எங்கிருந்தாலும் இப்போதும் வாழ்த்து சொல்வார்.

நான் திருமணமாகி வெளியூர் வந்த பிறகு அதுவும் குறைந்துவிட்டது. குடும்ப விசேஷங்களில் தான் பார்ப்பேன். என் கணவரும் எங்க உறவினர் விசேஷங்களில் பெரும்பாலும் கலந்து கொள்ளமாட்டார் என்பதால், நான் ஊருக்கு செல்வதே குறைந்துவிட்டது. சித்தப்பாவுக்கும் வெளிமாநிலத்தில் வேலை என்பதால் அவரும் ஊருக்கு வந்து செல்வது குறைந்துவிட்டது. அந்த இடைவெளியை கொரோனாவும், செல்போன் வீடியோ கால்களும் இப்போது குறைத்துவிட்டன.

ஒருநாள் சித்தப்பா, ‘பொங்கலுக்கு வர்றேன். நீயும் குடும்பத்தோட வாடா’ என்றார். இதுகுறித்து என் அம்மாவிடம் பேசியபோது, ‘என்ன நீயும் உன் சித்தப்பாவும் சம்பந்தியாக போறீங்களா’ என்று கேட்டார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. தொடர்ந்து பேசியபோது, ‘எனது அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி... அனைவருக்கும் எனது பெரிய மகளை, எனது சித்தப்பா மகனுக்கு கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.

சித்தப்பாவின் மகன் இன்ஜினியரிங் முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறான். எந்த கெட்டப்பழக்கங்களும் இல்லாதவன். பெண் பெரியவள். அவளுக்கு திருமணமாகி விட்டது. நான் எப்படி சிறு வயதில் என் சித்தப்பா கதியென்று இருந்தேனோ, அதுபோல் அவனும் ஊருக்கு வந்தால் ‘அக்கா... அக்கா...’ என்று என்னுடனேயே இருப்பான். அதனால் தம்பிக்கு தருவதில் எனக்கும் விருப்பம்தான். இதுகுறித்து என் கணவரிடம் பேசிய ேபாது, ‘என் பொண்ணுங்க விருப்பம்தான் முக்கியம். உங்க சித்தப்பா பையனுக்காக என்னோட பசங்க வாழ்க்கையை பலியிட முடியாது’ என்றார்.

பொங்கலுக்கு நானும், அவரும் மட்டும் ஊருக்கு போனோம். சித்தப்பா, சம்மந்தம் பேசலாமான்னு கேட்டார். என் கணவர் ஏதும் பேசாமல் இருந்ததால், நான், ‘அவ இப்பதான் படிச்சிட்டு இருக்கா... மேல படிக்கணும்னு சொல்றா பா’ என்றேன். அதற்கு சித்தப்பா, ‘படிக்கட்டும்டா.... நான் படிக்க வைக்கிறேன். கல்யாணம் பண்ணிடுவோம்’ என்று சொன்னார். அதற்கு நான், ‘எனக்கு ஒண்ணுமில்லப்பா.... அவதான் சொல்லணும்’ என்றேன்.

‘வேணும்ன்னா நிச்சயம் பண்ணிடுவோம். படிப்ப முடிச்சதும் கல்யாணம் வச்சிக்கலாம்’ என்றார். கூடவே ‘நீ என்ன சொல்றபா’ என்று எனது கணவரிடம் கேட்டார். அதற்கு அவரோ, ‘என்ன மாமா என்னை கேட்டுக்கிட்டு. இப்போ கூட வந்து பொண்ண கூட்டிட்டு போங்க’ எனக்கு ஒண்ணும் பிரச்னையில்லை’ என்றார். எனக்கு ஆச்சர்யம். ‘சரி சித்தப்பா வசதியாக இருப்பது தெரிந்து விட்டதோ’ என்று நினைத்துக் கொண்டே ஊருக்கு வந்து விட்டோம். பிறகு ஒருநாள் சித்தப்பா போன் செய்து, ‘வீட்டுக்கு வந்து பேத்திகிட்டேயே கேக்கிறேன்’ என்று சொல்ல, நான் மகிழ்ச்சியுடன் ‘சரி’ என்றேன். கணவரிடமும் ேபசியுள்ளார். அவரும் உற்சாகமாக வரச் சொல்லியுள்ளார்.

ஆனால் என்னிடம், ‘உன் தம்பிக்கும் , நம்ம பொண்ணுக்கும் இடையே 5, 6 வயது வித்தியாசம் இருக்கும்... செட்டாகாது. உங்க அம்மாதான் விவரம் தெரியாம இந்த வேலையை ஆரம்பிச்சிருக்காங்க’ என்றார். அதற்கு நான், ‘அதை என் சித்தப்பாவிடமே சொல்லி இருக்கலாமே. எதுக்கு வரச் சொல்லணும்’ என்றேன்.
அதற்கு அவர், ‘வயசு வித்தியாசம் இப்போதான் தெரியும்’ என்றார். உடனே நான், ‘5, 6 வயசு எல்லாம் பெரிய வித்தியாசமில்லை. நம்ம ரெண்டு பேருக்கும் 9 வயசு வித்தியாசம்’ என்று சொன்னேன். அதற்கு அவர், ‘அது அந்தக் காலம்... இப்போ அதெல்லாம் ஒத்து வராது. பொண்ணு வாழ்க்கை முக்கியம்’ என்று முடித்து விட்டார். நானும் நேரில் வந்து சித்தப்பாவே, என் மகளிடமே கேட்டு விடட்டும் என்று விட்டுவிட்டேன்.

சித்தப்பா வந்த நாளன்று... என் கணவர் காலையிலேயே எழுந்து கறி, மீன்... இனிப்பு, பழங்கள் என எல்லாம் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு வாங்கி வந்திருந்தார். மனம் மாறிவிட்டார்னு நினைச்சேன். வீட்டுக்கு வந்த சித்தப்பா என் மகளிடம் நேரடியாகவே கேட்க... அவளோ, ‘நான் படிக்கணும் தாத்தா. படிப்பு முடியுற வரைக்கும் கல்யாணம் வேணாம்’ என்று சொல்லிவிட்டாள். சித்தப்பாவும் படிப்பு முடிச்சதும் கல்யாணம் வச்சுக்கலாம். இப்ப நிச்சயம் செய்துகொள்ளலாம்’ என்றார்.

உடனே நான், ‘‘நிச்சயம் பண்ணி 2 வருஷங்கறது ரொம்ப அதிகம் பா. அதற்குள் என்ன வேணும்னாலும் நடக்கலாம். அதனால நிச்சயம் பண்ணா  உடனே கல்யாணம் செய்யணும்... இல்லனா எப்போ கல்யாணம் முடிவாகுதோ... அதுக்கு முன்னாடி நிச்சயம் பண்ணிக்கலாம்’’ என்றேன். சித்தப்பா என் கணவரை பார்க்க.... அவரோ, ‘என்ன மாமா... என்கிட்ட கேட்டுகிட்டு... உங்களுக்கு ஓகேனா இப்பவே கூட்டிட்டு போங்க’ என்றார். அதை கேட்ட சித்தப்பா சந்தோஷமாக ஊருக்கு புறப்பட்டார். அவர் போன பிறகு எங்கள் வீட்டில் ஒரே ரகளை.

என் மகள், ‘என் வாழ்க்கையை  நாசமாக்க பாக்கிறீயா.... உங்க தம்பி வயசென்ன.. என் வயசென்ன? வயசான ஆளுக்கு என்னை கட்டி வக்கப்பாக்கிறீயா....’ என்று கத்தினாள்.அதற்கு நான், ‘உங்க அப்பாவுக்கும் எனக்கும் 9 வருஷம் வித்தியாசம்... நாங்க வாழலையா? அதுவுமில்லாம நான் ஒண்ணும் ஓகே சொல்லல... வேணும்னா உங்க அப்பாவ கேளு’ என்றேன்.

அதற்கு அவளோ, ‘அப்பா நல்லவரு. பொண்ணு வாழ்க்கை கெட கூடாதுனு அக்கறையா இருக்கிறாரு. அவர் சொல்லலனா என் வாழ்க்கையை நீ சீரழிச்சிருப்ப.. உனக்கு என் மேலே அக்கறையே இல்ல’ என்று சத்தம் போட்டாள். அதுவரை அமைதியாக இருந்தவர், ‘நான் சொன்னா எங்கம்மா கேக்கறா.. அவங்க சித்தப்பாங்கறதால ஆடறா’ என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

அவர் போனாலும் ரகளை குறையவில்லை. அப்புறம் அவள் என்னிடம் பேசவேயில்லை. எல்லாம் முடிந்த பிறகு  எனது சின்ன மகளிடம் பேசியபோது, அவள் சொன்ன விஷயங்களை கேட்டு அதிர்ச்சியாக இருந்தது.என் சித்தப்பா வருவதற்கு முதல்நாள் நான் கோவிலுக்கு போன போது, என் கணவர் பெரிய மகளை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றுள்ளார். அவள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து பண்ணைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே, ‘உங்கம்மா, அவளோட சித்தப்பா மகனுக்கு கட்டி வைக்க, உங்க பாட்டியோட சேந்து திட்டம் போடுறா. அவனுக்கும், உனக்கும் 6 வயது வித்தியாசம். எனக்கு புடிக்கல. உங்கம்மாதான் அடம் புடிக்கிறா’ என்று கூறியுள்ளார்.

கூடவே, ‘உன் வாழ்க்கையை உன் அம்மா கெடுக்க பாக்கறா... நீ நல்லா படிச்சி, பெரிய வேலைக்கு போகணும்.... கை நிறைய சம்பாதிக்கணும். அதுக்கப்பறம் உனக்கு பிடிச்ச பையன சொல்லு... நா கல்யாணம் பண்ணி வைக்கிறேன். உங்க அம்மா சொல்ற பையனெல்லாம் வேணாம். அப்புறம் உங்க பாட்டிதான் எல்லாத்துக்கும் காரணம்... ’ என்றெல்லாம் சொல்லியுள்ளார்.

அதனால்தான் மகள் என் மீது கோபத்தில் குதிக்கிறாள் என்று புரிந்தது. நான் முதலில் சொன்னபோதே, அவருக்கு விருப்பமில்லை என்று சொல்லியிருந்தால் நான் சித்தப்பாவிடம் சொல்லி இந்த விஷயத்தை முதலிலேயே வளர விடாமல் செய்திருப்பேன். இல்லாவிட்டால், இவரிடம் கேட்ட போதாவது, ‘தனக்கு விருப்பமில்லை’ என்று சொல்லியிருக்கலாம். ‘இன்னும் 2 ஆண்டுகள் போகட்டும் அப்புறம் பேசலாம்’ என்று சொல்லி இருக்கலாம்.

ஆனால் அப்படி ஏதும் பேசாமல், அரசியல்வாதி போல் ஆளுக்கு தகுந்தாற் போல் ஏன் பேச வேண்டும். வீட்டுக்கு வெளியில்தான் அரசியல் செய்வார்கள். வீட்டுக்குள்ளேயுமா அதுவும் தனது மகளது வாழ்க்கையிலுமா அரசியல் செய்வார்கள்?

இப்போது யோசித்தால், விசாரித்தால்  எங்கள் வீட்டில் ஏற்பட்ட பல பிரச்னைகளுக்கு பின்னணியில் இவர்தான் இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. எங்கள் வீட்டில் மட்டுமல்ல அவரின் நெருக்கமான நண்பர்கள் குடும்பங்களிலும், இப்படி குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறார் என்ற தகவல்கள் இப்போதுதான் ஒவ்வொன்றாக வருகின்றன. நேரில் ஒன்றும், மறைவில் வேறு ஒன்றும் பேசி பிரச்னை ஏற்படுத்துவதில் இவருக்கு என்ன மகிழ்ச்சி கிடைக்கும்? சேடிஸ்டா இவர்?

இவரால் கடந்த 15 நாட்களாக எனது மகள் என்னிடம் பேசவில்லை. எத்தனை சொன்னாலும் புரிந்து கொள்ள மறுக்கிறாள்? அவரிடம் கேட்டால், ‘நான்தான் விவரம் தெரியாம உங்க குடும்பத்துல பொண்ணு கட்டி வீணா போயிட்டேன்! இப்போ என் பொண்ணையும் அந்த பாழங்கெணத்துல தள்ளப் பாக்கறீயா’ என்று கேட்கிறார்.

அவரை நன்றாக தெரிந்த என் தோழியோ, ‘உங்க வீட்டுக்காரர் மனநோயாளியா இருப்பாரு... அடுத்தவங்க கஷ்டப்படறத பார்த்து சந்தோஷப்படற குரூரமான ஆளு... ஏதாவது டாக்டருகிட்ட கூட்டிட்டு போ. உன் குடும்பம் மட்டுமல்ல.. மத்த குடும்பங்களும் நிம்மதியா இருக்கும்’ என்று சொல்கிறாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை?  என் கணவர் மன நோயாளியா? அவரது தப்பை எப்படி புரிய வைப்பது? அவர் திருந்த வாய்ப்பு உள்ளதா? அதற்கு என்ன செய்ய வேண்டும்? என் மகள் அவரது சதியை புரிந்து கொள்வாளா? என்னிடம் பழையபடி பேசுவாளா? அதற்கு என்னதான்  செய்வது தோழி?

நட்புடன் தோழிக்கு,

உங்களின் கடிதம் கண்டேன் தோழி...உங்களின் நிலைமை புரிகிறது. நீங்கள் கூறியவற்றை பார்க்கும்போது ‘உங்கள் கணவர் வெளிப்படையாக இல்லை’ என்று நீங்கள் கருதுகிறீர்கள். உங்க மகள் விஷயத்தில் அவர் நடந்து கொண்டதை வைத்துத்தான் உங்கள் கணவரை இப்போதுதான் புரிந்து கொண்டு இருக்கிறீர்கள். அவர் முழு நேர அரசியல்வாதி என்று நீங்கள் கூறினீர்கள். அவரை கல்யாணம் செய்து இவ்வளவு நாட்களாக அவரை நீங்கள் புரிந்து கொள்ளத் தவறி உள்ளீர்கள்.

உங்கள் சித்தப்பா உங்கள் கணவரை கேட்டாரே தவிர,  நீங்கள் உங்கள் கணவருடன் வெளிப்படையாக இதை பற்றிவிவாதம் செய்தீர்களா? உங்கள் கணவருக்கு இதில் விருப்பம் இல்லாமல் இருந்திருக்கிறது. உங்களிடம் சொன்னால் கூட, நீங்கள் அவரை சமாதானப்படுத்தி கல்யாணம் செய்துவைக்க முயற்சிப்பீர்கள் என்று கருதி இருக்கலாம். அதனால் உங்கள் பெண்ணை அவர் விருப்பத்திற்கு மன மாற்றம் செய்துள்ளார்.

நீங்கள் ஒருவேளை முந்திக் கொண்டு உங்கள் பெண்ணிடம் சம்மதம் வாங்கி விட்டாலும் இந்த கல்யாணம் நடந்து விடலாம். ஆதலால் அவர் முந்திக்கொண்டு தன் கருத்தை தன் மகளிடம் ஆழமாகப் பதிய வைத்துள்ளார். இத்தனை கால குடும்ப வாழ்க்கையில் உங்களுக்கு தெரியாமலேயே இதுபோன்ற முடிவுகளை அவர் நிறைய எடுத்திருக்கலாம்.

உங்கள் மகளின் வாழ்க்கை என்று வரும்போது அது உங்களுக்குத் தெரிந்து, அவள் உங்களிடம் பேசுவதில்லை என்ற நிலைமை வரும்போது உங்களுக்கு அதை ஏற்றுக் கொள்வது கடினமாக இருக்கிறது. உங்களுக்கான முடிவுகளை அவர் எடுக்கிறார். அதற்கு உங்களை சம்மதிக்க வைக்கிறார். அதுதான் அவருடைய இயல்பு. ஆரம்பத்தில் இருந்தே அவர் அப்படித்தான் இருப்பதும் தெரிகிறது.

அவர் குணம், உங்களுக்கு தெரியத்தான் இத்தனை காலமாகியிருக்கிறது. இதைவைத்து உங்கள் கணவருக்கு மனநோய் என்று சொல்லிவிட முடியாது. அவரை நேரில் பரிசோதனை செய்து அவர் தரும் விளக்கத்தை கேட்க வேண்டும். அவர்  ஏன் அப்படி நடந்து கொள்கிறார்? அவர் தரப்பு நியாயம் என்ன  என்பதை எல்லாம் அறிந்த பின்னரே அவர் மனதளவில் எப்படி உள்ளார் என்று சொல்ல முடியும். குடும்பம் சார்ந்த முடிவுகள், குழந்தைகள் பற்றிய முடிவுகள், திருமணம் சார்ந்த முடிவுகள் இவையெல்லாம் கணவன், மனைவி இருவரும் ஒத்த கருத்துடன் எடுத்தாலே பிரச்சனைகள் இருக்காது.

ஒருவருக்கு விருப்பமில்லை என்றாலும் அதை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படும். அதுவும் திருமணம் சார்ந்த முடிவுகள் என்றால் அதில் திருமணம் செய்து கொள்பவரின் ஒப்புதல் மிகவும் அவசியம். அவரின் முடிவைப் பொறுத்தே அந்த விஷயத்தை செயல்படுத்த இயலும். உங்கள் மகள் இதில் விருப்பமில்லை என்று கூறி விட்டதால் அவளை நீங்கள் கட்டாயப்படுத்துவது சரியாக வராது. நீங்கள் இந்த விஷயத்தில் உங்கள் மகளை அவளின் விருப்பம் போல் விட்டுவிடுங்கள். அவளே புரிந்துகொண்டு உங்களிடம் பேசுவாள்.

உங்கள் கணவரை நேரில் பார்த்து பேசினால் மட்டுமே அவரைப் பற்றி கூற இயலும். நீங்கள் சொல்வதை வைத்து யூகிக்க முடியுமே தவிர உறுதியாக கூற இயலாது. நான் கூற விரும்புவது, இனிவரும் காலங்களில் நீங்கள் உங்கள் கணவருடன் உங்கள் குடும்பம் சார்ந்த முடிவுகள் பற்றி விவாதம் செய்யுங்கள். அவர் ஏற்க மறுக்கிறார்... இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளது... அவர் எடுக்கும் முடிவுகள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதிக்கிறது... அவை உங்களுக்கு மன உளைச்சலை தருகிறது என்று நீங்கள் கருதினால் இருவரும் நல்ல மனநல மருத்துவரை பார்த்து ஆலோசனை செய்யுங்கள்.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

என்ன செய்வது தோழி
பகுதிக்கான கேள்விகளை எழுதி
அனுப்ப வேண்டிய முகவரி


‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600 004


வாசகிகள் கவனத்துக்கு, பிரச்னைகள்  குறித்து  எழுதும் போது  பிரச்னைகளுடன்  முழு  விவரங்களையும்  குறிப்பிடுங்கள். சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED ஆரோக்கிய கூந்தலுக்கு உதவும் அர்கன் ஆயில்!