ஆவடி காமராஜர் நகர் பகுதியில் இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி கட்டிடம்: மாணவிகள் அச்சம்

ஆவடி:  ஆவடி காமராஜர் நகர் பகுதியில் உள்ள அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் மாணவிகள் அச்சத்துடன் அங்கு படித்து வருகின்றனர். ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு எல்கேஜி முதல் பிளஸ் 2 வகுப்பு வரை சுமார் 2400 மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் உள்ள 10 கான்கிரீட் கட்டிடங்களில் கணினி அறை, ஸ்மார்ட் வகுப்பு தளவாடங்கள், நூலகம், தையல் பயிற்சி, உடற்பயிற்சி ஆசிரியர் அறை, ஆசிரியர்கள் அறைகள் உள்ளது. இங்கு சமீபத்தில் பெய்த கனமழையால் ஒரு கான்கிரீட் கட்டிடம் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அக்கட்டிடத்தில் மாணவிகளை அமர வைப்பதில்லை. அவர்களை நடைபாதை, ஆய்வறை, விளையாட்டு மைதானத்தில் அமரவைத்து பாடம் நடத்தப்பட்டு வருகிறது.  

இதேபோல், அப்பள்ளியில் ஒரு துப்புரவாளர் கூட இல்லாததால், அங்கு பள்ளியை தூய்மையாக வைத்துக் கொள்வதில் சிரமம் உள்ளது. மேலும், இப்பள்ளியில் ஒரு காவலாளி மட்டுமே பணியில் இருப்பதால் மாணவிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. அக்கட்டிடம் எந்நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில் அப்பள்ளி மாணவிகள் அச்சத்தில் உள்ளனர்.  

எனவே, இப்பள்ளியில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தை அகற்றிவிட்டு, அங்கு புதிய கட்டிடம் கட்டி தரவும், புதிதாக துப்புரவாளர், போதுமான காவலாளிகளை பணியில் நியமிக்கவும் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகளின் பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: