திருவள்ளூர், ஊத்துக்கோட்டையில் காமராஜரின் 120வது பிறந்தநாள் விழா

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள  நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராசரின் 120வது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர்  ப.விஷ்ணுசரண் தலைமை வகித்தார். பள்ளி இயக்குனர் பரணிதரன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஸ்டெல்லா ஜோசப் மாணவர்களை ஒருங்கிணைத்து வழி நடத்தினார்.

இந்த விழாவை முன்னிட்டு எல்கேஜி மழலைகள் முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் வரை 2000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் காமராஜரின் திருஉருவப்படத்திற்கு வண்ணம் தீட்டி அணிவகுத்து நின்றனர். விழாவின் சிறப்பு நிகழ்வாக பள்ளி விளையாட்டு திடலில் காமராசர் 120 என்று 50 அடிக்கும் மேல் காமராஜரின் பெயரை எழுதி அதன் மேல் அமர்ந்து காமராசரின் திரு உருவ படத்தை பிடித்து நின்றது பெரும் வியப்பூட்டும் விதமாக அமைந்திருந்தது.

அதுமட்டுமல்லாமல் காமராஜரை பற்றி வியப்பூட்டும் செய்திகளை தொடக்கப்பள்ளி மாணவர்கள் வழிபாட்டுக் கூட்டத்தில் எடுத்துரைத்தது அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியது. காமராஜர் பிறந்தநாள் விழாவில் பங்கு கொண்ட மாணவர்களையும், ஆசிரியர்களையும், அலுவலகப் பணியாளர்களையும் பள்ளி துணை முதல்வர் கவிதா கந்தசாமி மற்றும் தலைமை ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் காமராஜரின் 120வது பிறந்த நாள் விழா அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளியின் தலைமையாசிரியர் கதிரவன் தலைமை தாங்கினார். பள்ளியில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு பேரூராட்சி துணைத்தலைவர் குமரவேல், முன்னாள் பேரூராட்சி தலைவர் அபிராமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அப்துல் பரீத் ஆகியோர் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினர். இதற்கு, முன்னதாக காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மாணவர்களுக்கு பேரூராட்சி துணைதலைவர் குமரவேல் இனிப்பு வழங்கி கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் பேரூராட்சி தலைவர் அபிராமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊத்துக்கோட்டை வட்டார நாடார் ஐக்கிய சங்கத்தின் சார்பில் செல்வகுமார் தலைமையில் பஸ் நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து லட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதே போல், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட பிரதிநிதி செல்வகுமார் தலைமையில் நகர நிர்வாகிகள் கோவிந்தசாமி, குமார் ஆகியோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தும் கொண்டாடினர்.

இதேபோல் காமராஜரின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூரில் உள்ள காமராஜர் சிலைக்கு பாஜ ஓபிசி அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாஜ ஓபிசி அணி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாஜ மாநில ஓபிசி அணி செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். ஓபிசி அணி மாவட்ட தலைவர் சண்முகம், பொதுச் செயலாளர்கள் குமரன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அஷ்வின் (எ) ராஜசிம்ம மகேந்திரா, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் கருணாகரன், சீனிவாசன், ஜெய்கணேஷ், ஆர்யா சீனிவாசன், மாவட்ட பொருளாளர் மதுசூதனன், சுரேஷ், நகர தலைவர் சதீஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: