செங்கல்பட்டில் பரபரப்பு; நூதனமுறையில் செல்போன், பை திருட்டு: 2 பேர் கைது

செங்கல்பட்டு: நூதனமுறையில் செல்போன், பை ஆகியவற்றை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம், பச்சையம்மன் கோயில் பகுதி, முமாமலைத் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் கணேசன் (36). இவர்  நூதனமுறையில் பைகளை மட்டும் குறிவைத்து, கண் இமைக்கும் நேரத்தில் திருடிவிடுவார். இதையே தனது தொழிலாகவே செய்து வந்துள்ளார். இதற்காக,  அவர் தினசரி தனது இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டு நகர் பகுதியை வலம் வருவார். அப்போது, அவரது கண்ணில் படும் பைகளை திருடுவார்.

பின்னர், அதில் உள்ள பணமோ, செல்போனோ அல்லது உடனே காசாக்கக்கூடிய பொருட்கள் கிடைத்தால் அதை உடனடியாக விற்று அவரது நண்பர்களுக்கு மதுவிருந்து அளித்து தானும் ஜாலியாக இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இதற்கிடையில், செங்கல்பட்டு வேம்பாக்கம் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது மகன் வழக்கறிஞரான உமாபதி என்பவர் செங்கல்பட்டு நீதிமன்றம் செல்லும் வழியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் தனது இருசக்கர வாகனத்தின்மீது பையை வைத்துவிட்டு ஜெராக்ஸ் எடுத்துவிட்டு வெளியே வந்தபோது தனது பை காணாததால் அதிர்ச்சியடைந்தார்.

சென்னை ராமாபுரம் மைக்கேல் கார்டன் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ். இவரது  மகன்  ஜோசப் ஆல்வின்.  இவர் ஊர்ஊராக சென்று மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக தேர்ந்தெடுத்து, அங்கு மக்களோடுமக்களாக கலந்து செல்போன்களை திருடுவதை தனது தொழிலாக வைத்துள்ளார். இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவிக்காக வரும் உறவினர்கள் இரவு நேரங்களில் மருத்துவமனை வளாகத்தில் உறங்கும்போது, அவர்களோடு பேச்சு கொடுத்து அங்கேயே தூங்குவது போல் இவர் நடிப்பார். பின்னர், அவர்கள் உறங்கிய பிறகு அவர்களது செல்போன்களை திருடியுள்ளார். இந்நிலையில்,  சென்னை சோழிங்கநல்லூர் அண்ணா தெருவை சேர்ந்த சந்திரன் என்பவரது மகன் கந்தன் என்பவரின் செல்போனை திருட இவர் முயற்சித்தார். அப்போது கந்தனிடம் ஆல்வின் ஜோசப் கையும் களவுமாக பிடிபட்டார்.

இப்புகாரின்பேரில், செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, கணேசன் மற்றும் ஜோசப் ஆல்வின் ஆகியோரை கைது செய்தனர். பின்னர்,  கணேசனிடமிருந்து விதவிதமான பைகள், உயில்சாசன பத்திரம்,  அலுவலக முத்திரைகள் மற்றும் 1 லட்சத்து 30ஆயிரம் பணத்தையும், ஜோசப் ஆல்வினிடம் இருந்து ஒரு லட்சம் மதிப்பிலான செல்போன்களை பறிமுதல்  செய்தனர். இதையடுத்து, 2 பேரையும்  சிறையில் அடைத்தனர்.  

Related Stories: