×

திருப்போரூர் பேரூராட்சியில் ஜல்லி கொட்டப்பட்ட சாலைகள் சீரமைப்பு

திருப்போரூர்:  திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளுக்காக பேரூராட்சியில் உள்ள பல்வேறு தெருக்கள், சாலைகளின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் புதைக்கப்பட்டன. இதன் காரணமாக நான்கு மாடவீதிகள், சான்றோர் தெரு, வணிகர் தெரு, புதுத்தெரு, திரௌபதை அம்மன் கோயில் தெரு, கன்னியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பல தெருக்களில் மக்கள் நடமாட முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக மாறின.
 
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் கந்தசுவாமி கோயில் தேரோட்டம் நடைபெற்றதால் 4 மாடவீதிகள் மட்டும் சீரமைக்கப்பட்டது. பின்னர், திருவஞ்சாவடி தெரு, சிதம்பர சுவாமிகள் மடம் தெரு உள்ளிட்ட சாலைகள் புதியதாக மாற்றப்பட்டன. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் கன்னியம்மன் கோயில் தெரு, காந்தி தெரு, வணிகர் தெரு, திரௌபதை அம்மன் கோயில் தெரு உள்ளிட்ட தெருக்களில் தார் சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால், 2 மாதங்கள் நிறைவடைந்தும்  சாலை அமைக்கப்படவில்லை.
 
இதன் காரணமாக பொதுமக்கள் ஜல்லி கற்களில் நடந்து செல்ல முடியாமலும், வாகனங்களில் செல்ல முடியாமலும் கடும் வேதனைக்குள்ளாயினர். இதுகுறித்து நமது தினகரன் நாளிதழில் கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து திருப்போரூர் பேரூராட்சி தலைவர் மு.தேவராஜ் ஜல்லி கொட்டப்பட்டிருந்த சாலைகளை பார்வையிட்டு சாலைப்பணிகளை உடனடியாக முடித்து தருமாறு ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து பழைய சாலைகள் பெயர்த்தெடுக்கப்பட்டு, பின்னர், தார் சாலைகளும் போடப்பட்டன. மக்களின் கோரிக்கையை ஏற்று செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர். 


Tags : Tiruporur , Repair of graveled roads in Tiruporur municipality
× RELATED திருப்போரூர் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ