ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை அமைப்பு; எவ்ளோ வேணுமோ வாங்கிக்கோ...இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு: பொருளாதார தடை கிடையாது; நாடாளுமன்றத்தில் தீர்மானம்

வாஷிங்டன்: ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணைகளை இந்தியா வாங்குவதற்கான தடைகளில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டத் திருத்தம் அமெரிக்க நாடாளுமன்றத்தில்  நிறைவேறியது. கடந்த 2017ம் ஆண்டு, ‘சிஏஏடிஎஸ்ஏ’ என்ற கடுமையான  சட்டத்தை அமெரிக்கா கொண்டு வந்தது.  ரஷ்யாவின் பாதுகாப்பு, உளவுத்துறைகளுடன் இணைந்து பரிவர்த்தனைகளில் ஈடுபடும் நாடுகளின் மீது தடை விதிக்கவும், அவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் இச்சட்டம் வழிவகுக்கிறது. மேலும்,  ரஷ்யாவிடம் இருந்து ராணுவ  சாதனங்களை வாங்கும் நாடுகள் மீதும்  பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்க நிர்வாகத்தை இது அங்கீகரிக்கிறது.

இந்நிலையில், ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கிய துருக்கியின் மீது அமெரிக்கா ஏற்கனவே பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதே நேரம், இதே ஏவுகணை அமைப்பை இந்தியாவும் ரஷ்யாவிடம இருந்து வாங்குகிறது. இதனால், இந்தியாவின் மீதும் அமெரிக்கா நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி நீண்ட நாட்களாக எழுந்து வருகிறது.

இந்நிலையில், இந்த ஏவுகணை அமைப்பை இந்தியா வாங்குவதற்கு ஏதுவாக, தடையில் இருந்து  விலக்கு அளிக்கும் சட்டத் திருத்தம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் குரல்  வாக்கெடுப்பு மூலம் நேற்று நிறைவேறியது. இது குறித்து அமெரிக்க எம்பி ரோ கன்னா கூறுகையில், ‘‘சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவுடன் அமெரிக்காவும் நிற்க வேண்டும். இருநாடுகளுக்கும் இடையிலான ஆழமான நட்புறவை வலுப்படுத்தவும்,  சீன எல்லையில் இந்தியா தன்னைத் தற்காத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது,’’ என்றார். இதன் மூலம், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எவ்வளவு எஸ்-400 வேண்டுமானாலும் வாங்கினாலும், அமெரிக்கா நடவடிக்கை எடுக்காது என்பது இதன் மூலம் உறுதியாகி இருக்கிறது.

Related Stories: