திருவானைக்காவல், லால்குடி ஆம்பரவனேஸ்வரர் கோயில்களில்; ஓலைச்சுவடிகளை ஆவணப்படுத்தும் பணி துவக்கம்

திருச்சி: திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், லால்குடி ஆம்பரவனேஸ்வரர் கோயில்களில் ஓலைச்சுவடிகளை ஆவணப்படுத்தும் பணி துவங்கியுள்ளது.

பஞ்சபூத தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் 200 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலின் வரவு செலவு கணக்குகளை பனை ஓலைச்சுவடிகளில் குறித்து வந்துள்ளனர். அதில் பால், நெல், நெய், பழங்கள் போன்றவை குறித்த வரவு செலவுகளும் இடம் பெற்றுள்ளது. இப்படி பயன்படுத்திய 7 ஆயிரம் ஓலைச்சுவடிகள் தற்போது வரை கோயிலில் மர பீரோவில் கதர் துணியால் சுற்றப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஓலைச்சுவடிகளை மொழியாக்கம் செய்து பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது.

இந்நிலையில் கோயில்களிலும், மடங்களிலும் உள்ள அரிய பனை ஓலைச்சுவடிகள் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. அதன்படி ஓலைச்சுவடிகளை தூரிகை கொண்டு துடைத்தல், சுவடி நூல்குறிப்புகளை அட்டவணைப்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள சென்னை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்இலக்கியம் மற்றும் சுவடியியல் துறை மூலமாக 6 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

இந்த குழுவினர் திருவானைக்காவல் கோயிலில் முதற்கட்டமாக கடந்த 1-ம் தேதி முதல் ஓலைச்சுவடிகளை அட்டவணை படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாத இறுதிக்குள் பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ஓலைச்சுவடிகளை பராமரிப்பு தொடர்பான பணிகளை நேற்றுமுன்தினம் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஹரிப்பிரியா ஆய்வு செய்தார். அப்போது பணிகளை துரிதமாக முடிக்க உத்தரவிட்டு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.இதேபோல் லால்குடி ஆம்பரவனேஸ்வரர் கோயிலிலும் இந்த பணிகள் நடந்து வருகிறது. ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஏற்கனவே ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: