×

மழையால் வெள்ளப்பெருக்கு மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

அம்பை: மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் ஏற்பட்ட மணிமுத்தாறு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மணிமுத்தாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 118 அடியாகும். அணையில் 5 ஆயிரத்து 511 மில்லியன் கன அடி நீர் தேக்க முடியும். பொதுவாக வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் மணிமுத்தாறு அணை நிரம்பி வழியும்.

தென் மேற்று பருவமழை காலத்தில் மணிமுத்தாறு அணைக்கு போதிய நீர்வரத்து இருக்காது. இதனால் மழை பெய்தால் மட்டுமே மணிமுத்தாறு அணைக்கு நீர் வரத்து இருக்கும். இங்கு மணிமுத்தாறு அருவியும் அமைந்துள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும். இதனால் மணிமுத்தாறு அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணையின் அழகை கண்டு ரசிப்பதுடன், மணிமுத்தாறு அணையிலும் குளித்து மகிழ்வர். பின்னர் குடும்பத்துடன் அருவிப் பகுதியில் அமர்ந்து உணவு உண்பது வழக்கம்.

இதனால் மணிமுத்தாறு அருவிப் பகுதியில் எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். மணிமுத்தாறு அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, பாண்டிச்சேரி உள்பட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து மகிழ்கின்றனர். இந்தநிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக கடந்த சில நாட்ககளாக மேற்கு தொடர்ச்சி மலை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல் மழை பெய்து வந்தது. நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அருவியை தொலைவில் இருந்து பார்வையிட வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. நேற்று காலை நிலவரப்படி மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 275 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் 3.8 மி.மீ மழை பெய்துள்ளது.

Tags : Manimutharam , Bathing in Manimutthar waterfall is prohibited due to flooding due to rain
× RELATED தொடர் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை