×

நீலகிரியில் காற்றுடன் தொடரும் கனமழை; 3 இடங்களில் மண்சரிவு 10 வீடுகள் இடிந்து சேதம்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் கூடிய கன மழை பெய்து வரும் நிலையில், 3 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதுடன், 10 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் மழையின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. ஊட்டி மற்றும் குந்தாவில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், பல இடங்களில் மரங்கள் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.

ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் மழை தொடர்வதால் பள்ளிகளுக்கு நேற்று முன்தினமும், நேற்றும் விடுமுறை விடப்பட்டது. மழை தொடரும் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இதுவரை கூடலூர் பகுதியில் 10 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. ஊட்டி - கூடலூர் சாலையில் நடுவட்டம் உட்பட மாவட்டத்தில் 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கூடலூர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மாயாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு தெப்பக்காடு தரைப்பாலத்திற்கு மேல் மழை நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதற்கிடையே மழை அதிகம் பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடலூர் பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Nilgiris , Heavy rain accompanied by wind in Nilgiris; Landslides in 3 places damaged 10 houses
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...