குண்டர்களை கொண்டு தாக்கி தலைமை அலுவலகத்தை சூறையாடினார்கள்; ஓபிஎஸ் மீது இபிஎஸ் தாக்கு.!

உளுந்தூர்பேட்டை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று உளுந்தூர்பேட்டை வந்தார். அப்போது கட்சியினர் அளித்த வரவேற்பின்போது பேசிய அவர், அதிமுக ஆட்சி வருவதற்கு தடைக்கல்லாக இருந்தவர்கள் தற்போது உடைத்தெறியப்பட்டுள்ளனர். குண்டர்களை வைத்து தலைமை அலுவலகத்தை சூறையாடினார்கள் என்று ஓபிஎஸ் உள்ளிட்டோரை மறைமுகமாக தாக்கினார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்ற பின்னர் முதன்முறையாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டைக்கு இன்று வந்தார். அவருக்கு மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு தலைமையில் ஏராளமான அதிமுகவினர் பேருந்து நிலைய பகுதியில் வரவேற்பு அளித்தனர். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடையே பேசியதாவது: கடந்த தேர்தலில் அதிமுக ஆட்சி வருவதற்கு தடைக்கல்லாக இருந்தவர்கள் (ஓபிஎஸ் உள்ளிட்டோர்) தற்போது உடைத்து எறியப்பட்டுள்ளனர்.

ஒற்றை தலைமையை ஏற்று பெரும்பாலானவர்களின் ஆதரவோடு இடைக்கால பொதுச்செயலாளராக நான் பொறுப்பேற்று உள்ளேன். தலைமை அலுவலகத்தை குண்டர்களை கொண்டு தாக்கி அறை கதவுகள் உடைக்கப்பட்டு அலுவலகத்தை சூறையாடினார்கள். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டு சென்றார்.

Related Stories: