×

திருத்தணியில் ஆடி கிருத்திகை; பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் சா.மு.நாசர் ஆலோசனை

திருவள்ளூர்: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை 5 நாட்கள் ஆடி கிருத்திகை பெருவிழா நடைபெறுகிறது. இதில் 21ம் தேதி அஸ்வினி விழாவும், 22ம் தேதி பரணி விழாவும், 23ம் ஆடி கிருத்திகை விழா மற்றும் முதல் தெப்பல் விழாவும்,  24ம் தேதி 2ம் தெப்பல் விழாவும்,  25ம் தேதி 3ம் தெப்பல் விழாவும் நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானுக்கு மலர் காவடிகள் எடுத்தும், தலைமுடி காணிக்கை செலுத்தியும் வேண்டுதலை  நிறைவேற்றுவார்கள்.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடி கிருத்திகை விழாவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தாண்டு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். எஸ்பி பெகேர்லா செபாஸ் கல்யாண், மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், திமுக மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி,  நகர்மன்ற துணைத் தலைவர் சாமிராஜ் முன்னிலை வகித்தனர். கோயில் துணை ஆணையர் விஜயா வரவேற்றார். கூட்டத்தில் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பங்கேற்ற, கிருத்திகை விழாவில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிய வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர், கழிவறை,  தங்கும் வசதி ஆகியவை தங்கு தடையின்றி கிடைப்பதற்கு எடுக்க வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆடி கிருத்திகை மற்றும் தெப்ப திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். அதனால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. பக்தர்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை திருத்தணிக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300 பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு 500 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், சுகாதார துறை சார்பில் சிறப்பு மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். அதே நேரத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்’ என்றார்.

Tags : Audi ,Tiritrani ,Minister ,Sahikar ,Nassar , Aadi Krittikai in Tiruthani; Minister S.M. Nasser consults with officials about security measures
× RELATED இன்சூரன்ஸ் இல்லாத ஆடி காரில் வந்து...