×

களக்காடு அருகே குறுகிய பாலத்தால் வாகனங்கள் நுழைய முடியாத கிராமம்: பொதுமக்கள், மாணவர்கள் பாதிப்பு

களக்காடு: களக்காடு அருகே ஆற்றை கடக்க, உயர்மட்ட பாலம் இல்லாததால் வாகனங்கள் நுழைய முடியாமல் ஒரு கிராமம் தீவு போல காணப்படுவதால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். களக்காடு அருகேயுள்ள காமராஜ்நகரில் 800க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களின் பெரும்பாலானோர் விவசாய தொழிலாளர்கள். மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு அருகிலுள்ள மஞ்சுவிளைக்கு வரவேண்டும். காமராஜ்நகர்-மஞ்சுவிளை இடையே ஓடும் பச்சையாற்றின் மீது கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நடைபாலம் அமைக்கப்பட்டது. குறுகிய இந்த பாலத்தின் பக்கவாட்டிலுள்ள தடுப்பு கம்பிகள் சேதமடைந்து அபாயகரமான நிலையில் உள்ளது. இந்த பாலத்தின் வழியாகத்தான் கிராம மக்கள், தினசரி வந்து செல்கின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மஞ்சுவிளை, களக்காடு, நெல்லை மற்றும் வெளியூர்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். அவர்கள் கரணம் தப்பினால் மரணம் என்பது போல ஆபத்தான நிலையில் இந்த பாலத்தின் வழியாக வந்து செல்கின்றனர். சுமார் 20 அடி உயரத்தில் பாலம் உள்ளதால் சிறுவர்கள் ஆற்றில் விழுந்து விடக்கூடாது என்பதற்காக பெற்றோர்களும் உடன் வர வேண்டியதுள்ளது.

பாலம் குறுகியதாக இருப்பதால் ஆட்டோ, கார்கள், வேன்கள், பள்ளி பேருந்துகள் என எந்த வாகனமும் கிராமத்திற்குள் நுழைய முடியாது என்பதால் காமராஜ்நகர் தனி தீவு போலவே காட்சி அளிக்கிறது. மேலும் இப்பகுதியினருக்கான ரேஷன்கடை மஞ்சுவிளையில் உள்ளது. அங்கு ெசன்று பொருட்களை வாங்கி கொண்டு பாலத்தின் வழியாக சிரமத்துடனே பயணிக்கின்றனர். கிராமத்தில் யாருக்காவது உடல்நலம் பாதிக்கப்பட்டால் ஆம்புலன்ஸ் கூட கிராமத்திற்குள் வர முடியாது. இதனால் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. குறுகிய பாலத்தில் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. அத்துடன் காமராஜ்நகர் பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு விவசாய பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகளும் திணறி வருகின்றனர்.

நவீனமயமாக மாறி வரும் இக்காலத்தில் காமராஜ்நகர் கிராம மக்களுக்கு போக்குவரத்து என்பது எட்டாக்கனியாகவே உள்ளது வேதனை தரக்கூடியதாகும். எனவே மஞ்சுவிளை-காமராஜ்நகர் இடையே பச்சையாற்றின் மீதுள்ள நடைபாலத்தை அகற்றிவிட்டு புதிதாக அகலமாக உயர்மட்ட பாலம் அமைத்து தரவேண்டும் என்று காமராஜ்நகர் மக்கள் நீண்டநாள் கோரிக்கை ஆகும். இதுகுறித்து நகராட்சி கவுன்சிலர் சிம்சோன் துரை கூறுகையில், பச்சையாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க கோரி அதிகாரிகளுக்கு மனுக்கள் மூலம் முறையிட்டுள்ளோம். இனிமேலாவது பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.



Tags : Kalakadu , Near Kalakadu Vehicles over the narrow bridge Inaccessible village: Civilians, students affected
× RELATED களக்காடு மலையில் நீரோடைகள் வறண்டு...