×

இடம் தேர்வு செய்தும் பணிகள் நடைபெறவில்லை நீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு கடந்த 1998ம் ஆண்டில் இடம் தேர்வு செய்யப்பட்டும் கிடப்பில் கிடப்பதால் தற்போதைய திமுக ஆட்சியில் பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாகை-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது நீடாமங்கலம். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும். நீடாமங்கலம் வழியாக சென்னை, கும்பகோணம், பட்டுக்கோட்டை மார்க்க பேருந்துகளும், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கரூர், கோவை, கேரளா உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளும் நீடாமங்கலம் வழியாக பெரும்பாலும் செல்கிறது. நீடாமங்கலம் 15 வார்டுகளைக் கொண்ட முதல் நிலை பேரூராட்சியாக இருந்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் உள்ள நவகிரககோயில் உள்பட நீடாமங்கலத்தை சுற்றியுள்ள முக்கிய கோயில்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் நீடாமங்கலம் வந்துதான் செல்கின்றனர்.

இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த நீடாமங்கலத்தில் நின்று செல்ல பேருந்து நிலையம் இல்லை. நீடாமங்கலத்திலிருந்து திருவாரூர் சாலையில் 10 கிலோ மீட்டரில் கொரடாச்சேரியில் ஒரு பேருந்து நிலையமும், தஞ்சாவூர் செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டரில் அம்மாப்பேட்டையிலும் பேருந்துகள் நின்று செல்ல பேருந்து நிலையம் உள்ளது. கடந்த 1998 ம் ஆண்டு அப்போது ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த ராஜமாணிக்கம் நீடாமங்கலம் உழவர் சந்தை எதிரே தஞ்சை சத்திரத்திற்கு சொந்தமான ஒரு இடத்தை தேர்வு செய்து பேருந்து நிலையம் கொண்டு வருவதற்கு கடும் முயற்சி மேற்கொண்டார். அதன் பிறகு வந்த அதிமுக ஆட்சியில் அந்த பணியை அப்படியே கிடப்பி போட்டனர். அதன் பிறகு வந்த அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ நீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தற்போதுள்ள திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுத்து உழவர் சந்தை எதிரே ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என நீடாமங்கலம் பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.




Tags : Needamangalam , Even after choosing the location, the work is not done. Will a bus station be established at Needamangalam?: public expectations
× RELATED உடல் ஆரோக்கியம் சீராக இருக்க இயற்கை...