×

மேடு, பள்ளமாக உருக்குலைந்ததால் வாகனஓட்டிகள் அவதி நெல்லையப்பர் நெடுஞ்சாலைக்கு நிரந்தரத்தீர்வு கிடைக்குமா?: தூசி பறப்பதால் ஆஸ்துமா பரவும் அபாயம்

நெல்லை: நெல்லை டவுனில் முறையான பராமரிப்பின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெல்லையப்பர் நெடுஞ்சாலையானது குண்டு, குழிகளோடு மேடு பள்ளமாக உருக்குலைந்துள்ளது. அத்துடன் வாகனங்கள் செல்லும்போதெல்லாம் சாலையில் தூசி பறப்பதால், பொதுமக்களுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்து வருகிறது. நெல்லை டவுனில் வரலாற்றுச்சிறப்புமிக்க நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழாவின் சிகரமான தேரோட்ட வைபவம் இரு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. ரோட்டத்தை காண நெல்லை மாவட்டம் மட்டுமின்றி, தூத்துக்குடி, ெதன்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகைதந்த லட்சக்கணக்கான பக்தர்கள், முறையான பராமரிப்பின்றி பாழான நெல்லையப்பர் நெடுஞ்சாலையின் அவலம் கண்டு முகம் சுழித்தபடியே சென்றனர். நெல்லை பொருட்காட்சி திடலில் அமைந்துள்ள தற்காலிக பஸ் நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த நிலையில், பஸ் ஏற வந்தவர்களும், பைக்குகளில் சென்றவர்களும் இச்சாலையில் பறக்கும் தூசி துகள்களால் முகம்வாடி சென்றனர். தேரோட்டத்திற்கு முன்னர் இச்சாலையை செப்பனிட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கடைசிக்கட்டத்தில் தோல்வியில் முடிந்தன. இச்சாலையை விரைந்து செப்பனிட வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் ஆவலாக உள்ளது.

நெல்லையப்பர் நெடுஞ்சாலையானது புரம் தலைமை தபால் நிலையம் தொடங்கி டவுன் ஆர்ச் வரை மேடு, பள்ளமாக காணப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இச்சாலையை பாதாள சாக்கடை பணிகளுக்காக கையகப்படுத்திய நெல்லை மாநகராட்சி ஆங்காங்கே குழிகளை தோண்டி மூடியது. இதனால் சாலையில் ஒரு பகுதி மேடாகவும், மறுபகுதி பள்ளமாகவும் காட்சியளிக்கிறது. மேலும் குழிதோண்டிய மணல் அதிகம் காணப்படுவதால், வாகனங்கள் செல்லும்போது தூசி பறக்கிறது.நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் நிலவும் அவலம் குறித்து புரம் கூலி தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் முத்துவேல்ராஜா, பகுதி பொறுப்பாளர் காந்தி ஆகியோர் கூறுகையில் ‘‘நெல்லையப்பர் நெடுஞ்சாலை வர்த்தக நிறுவனங்கள் நிரம்பிய பகுதியாகும். இச்சாலையில் கடைகளுக்கு வரும் லோடுகளை ஏற்றி இறக்குவதற்கு மட்டுமே 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். சாலையோரத்தில் சமீபகாலமாக அமர கூட முடிவதில்லை. அந்தளவுக்கு எப்போதும் தூசிகள் பறக்கின்றன. இதனால் ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. சமீபகாலமாக மே காத்து வீசுவதால், புரம் பகுதியே புழுதிமயமாக காட்சியளிக்கிறது. இச்சாலையில் பயணிக்கும் 5 பைக்குகளாவது தினமும் வளைவு நொடிகளில் சிக்கி கீழே விழுகின்றன. எங்கள் தொழிலாளர்கள் அவர்களை தூக்கி உட்கார வைத்து ஆசுவாசப்படுத்தி அனுப்புகின்றனர். கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்து வியாபார ஸ்தலங்கள் தவிக்கின்றன. இச்சாலையில் லாரிகளில் லோடு ஏற்றி செல்லவே டிரைவர்கள் தயங்குகின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இச்சாலையை விரைந்து சீரமைத்து தருமாறு கேட்டு கொள்கிறோம்’’ என்றனர்.

நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் புரம் தலைமை தபால் நிலையம், பிஎஸ்என்எல் அலுவலகம், தலைமை கால்நடை மருத்துவமனை, நெல்ைல மாநகராட்சி, தாலுகா அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ளன. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட முக்கிய வங்கிகள், சினிமா தியேட்டர்கள், நெல்லை டவுன் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகள், ஜூவல்லரிகள், கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்களும் அதிகம். இவற்றிற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அரைமணி நேரம் அச்சாலையில் அவர்கள் நின்றாலே அணிந்திருக்கும் ஆடைகள் அழுக்கு படிந்து நிறம் மாறிவிடுகிறது. நெல்லை சந்திப்பு மற்றும் டவுனில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்கள் நெல்லையப்பர் நெடுஞ்சாலை பணி என்றாலே ‘ஆளை விடுங்கள்’ என கையெடுத்து கும்பிடுகின்றனர். அப்படியே பணிக்கு வரும் காவலர்களும் முக கவசம், கண்ணுக்கு கண்ணாடி சகிதம் போக்குவரத்தை சீர்படுத்த வேண்டியதுள்ளது. இச்சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்களின் பின்னால் பைக்குகளில் செல்வோர் மீது சகட்டுமேனிக்கு தூசி படிகிறது. வாகன ஓட்டிகளின் தலையும், முகமும் புழுதியால் நிரம்பி வழிகிறது. அதிகாலை தவிர அனைத்துவேளையிலும் இச்சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்வதே மிகவும் சவாலாக உள்ளதாக வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர்.

மாற்றுத் திட்டச்சாலை அமல்படுத்தினால் தீர்வு
போக்குவரத்து நெருக்கடிக்கான நிரந்தரத் தீர்வு குறித்து நெல்லை மாவட்ட பொதுநல பொதுஜன சங்கத்தலைவர் முகமது அயூப் கூறுகையில் ‘‘டவுன் நெல்லையப்பர் நெடுஞ்சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என மாநகராட்சியிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் ஏற்கனவே மனுக்கள் அளித்துள்ளோம். பாதாள சாக்கடை பணிகள் நிறைவுற்ற நிலையில், நெடுஞ்சாலைத்துறை விரைந்து சீரமைக்க வேண்டும். சாலையை விரிவுபடுத்துவதோடு சாலையோரம் பாதசாரிகள் நடந்துசெல்ல ஏதுவாக நடைப்பாதைகளும் அமைத்து கொடுத்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். புரம் கால்நடை மருத்துவமனை அருகில் இருந்து, மணிப்புரம் வழியாக அருணகிரி தியேட்டருக்கான மாற்றுத்திட்ட சாலையையும் அமல்படுத்தினால் டவுனில் நிச்சயம் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தரத்தீர்வு கிடைக்கும்’’ என்றார்.

விரைவில் ஆக்கிரமிப்பு அகற்றம்
இதனிடையே நெல்லையப்பர் நெடுஞ்சாலை சீரமைப்பு குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில் ‘‘பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளுக்காக இச்சாலை சில மாதங்களாக மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. இப்போது இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. எனவே, இச்சாலையை விரைவில் சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம். அத்துடன் சாலை முகப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளும் முழுமையாக அகற்றப்படும்’’ என்றனர்.

நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் தற்போது ஆர்ச் அருகே போலீசார் தடுப்புகள் அமைத்துள்ளனர். போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க புரத்தில் இருந்து டவுனுக்கு செல்லும் வாகனங்கள், ஆர்ச் பகுதிக்குள் நேரடியாக நுழைய முடியாது. டவுன் செல்லும் பஸ்கள் தடுப்புகள் இருக்கும் பகுதியில் லேசாக திரும்பி, மீண்டும் கோயில் வாசலுக்கு செல்கின்றன. சேரன்மகாதேவி, முக்கூடல் செல்லும் அரசு பஸ்களும், வாகனங்களும் வழக்கம்போல் இணைப்பு சாலையை பயன்படுத்தி, தெற்கு மவுன்ட் ரோடு வழியாக செல்கின்றன. நெல்லையப்பர் நெடுஞ்சாலை சீரமைப்புக்கு பின்னர், ஆர்ச் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் புரம் தலைமை தபால் நிலையம், பிஎஸ்என்எல் அலுவலகம், தலைமை கால்நடை மருத்துவமனை, நெல்ைல மாநகராட்சி, தாலுகா அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ளன.

Tags : Nellaipar highway , Motorists suffered as the ridge collapsed into a ditch Permanent solution for Nellaipar Expressway?: Asthma risk due to flying dust
× RELATED நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரத்தில்...