×

அந்தரத்தில் செல்வோம் சாகசம்... மன்னவனூரை கண்டால் பரவசம்...!: படகு சவாரியும் இருக்கு... வாரீங்களா?

லீவு  விட்டாச்சு... டூர்னு பிளான் பண்ணாலே லிஸ்ட்ல முதல்ல இடம் பெறும் இடம்  கொடைக்கானலாகத்தான் இருக்கும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள்,  வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் என சுற்றுலாப்பயணிகள் குவிந்தவண்ணம் உள்ளனர்.  பொதுவாக, கொடைக்கானலுக்கு செல்லும் பலர் பிரையண்ட் பூங்கா, ேகாகர்ஸ் வாக்,  குணா குகை, நட்சத்திர ஏரியில் படகு சவாரி இப்படி ஒரு வட்டத்துக்குள்ளே  சுற்றுலாவை முடித்துக் கொள்வதுண்டு. ஆனால், அதையும் தாண்டி அற்புதமான  இடங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம்.
ஏன்  நிறைய பேர் இங்கே போறதில்லைன்னு யோசிச்சா ரெண்டே விஷயம்... ஒண்ணு தூரம்...  மற்றொன்று போதிய பஸ் வசதியில்லாததது. இதனால் வாகனங்களில் வருபவர்கள் இங்கு  அதிகம் வந்து செல்கின்றனர். கொடைக்கானல் நகர் பகுதியில் இருந்து 34 கிமீ  தொலைவில் இந்த மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் உள்ளது. வனத்துறையின்  கட்டுப்பாட்டில் உள்ள இந்த சூழல் சுற்றுலா மையத்தில் ஏரி ஒன்றும் உள்ளது.  இந்த ஏரியில் பரிசல் படகு, துடுப்பு படகு சவாரி செய்து மகிழலாம்.  ஏரிக்கரையில் குதிரை சவாரியும் போகலாம். சூழல் சுற்றுலா மையத்திற்கு  நுழைவுக்கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.20, கேமரா  கட்டணமாக ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பரிசல் படகில் சவாரி  செய்வதற்கு கட்டணம் ரூ.100, துடுப்பு படகில் ஒருவர் பயணிக்க ரூ.250, இருவர்  சவாரி செய்ய ரூ.400 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கு சமீபத்தில்  ‘ஜிப் ரோப்’ எனும் சாகச கயிறு பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதில் சாகச கயிற்றில் தொங்கியபடியே ஏரியின் குறுக்கே பயணிக்கலாம். பயண  தூரம் 50 மீ. 60 கிலோ எடையுள்ள நபர்களே பயணிக்க அனுமதி உண்டு. இந்த  ஜிப்ரோப் பயணத்திற்கு நபர் ஒன்றுக்கு ரூ.500 கட்டணம். நுழைவு கட்டணம்  நீங்கலாக தனித்தனியாக இந்த கட்டணங்களை செலுத்தி படகு சவாரி, ஜிப் ரோப்  சவாரி, குதிரை சவாரி செய்யலாம். மன்னவனூர் சூழல் சுற்றுலா மையப்பகுதியில்,  மத்திய அரசின் ஆடுகள் ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு விதவிதமான ஆடுகளையும்,  முயல்களையும் கண்டு ரசிக்கலாம். என்ன மக்களே... எங்கே கிளம்பிட்டீங்க... மன்னவனூரை பார்க்க கிளம்பிட்டீங்களா?



Tags : Antaram ,Mannavanur , Let's go on an adventure... Excited to see Mannavanur...: There is also a boat ride... Are you going?
× RELATED சூரிய பகவான் வணங்கிய தலங்கள்